ஒருவருட போட்டித் தடைக்கு முகங்கொடுத்துள்ள ஆப்கான் வீரர்

647
© AFP

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பாதியில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அப்தாப் அலாமுக்கு ஒரு வருட காலப்பகுதிக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தடைவிதித்துள்ளது. 

ஒழுக்க விதிகளை மீறிய வீரரை நாட்டுக்கு அனுப்பும் ஆப்கான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போதைய ……..

சர்வதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஆகியவற்றின் ஒழுக்க விதிமுறையினை மீறிய குற்றச்சாட்டு காரணமாக இவருக்கு குறித்த தண்டனையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு வழங்கியுள்ளது. 

உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த அப்தாப் அலாம் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இவர், இறுதியாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

எனினும், இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர், அப்தாப் அலாம் திடீரென அணியிலிருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக அஹ்மட் சிர்ஷாத் அணியில் இணைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஐசிசி மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைகளின் ஒழுக்க விதிகளை மீறியதன் காரணமாகவே இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

அப்தாப் அலாம் நாட்டுக்கு திருப்பியனுப்பப்ட்ட பின்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த விசாரணை நிறைவுபெற்றிருக்கும் நிலையில், அப்தாப் அலாம், உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் ஒருவருட காலத்துக்கு விளையாட முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சௌதெம்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் அணி தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து பெண் ஒருவரிடம் தவறாக நடந்துக்கொண்ட காரணத்துக்காகவே அப்தாப் அலாமிற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அப்தாப் அலாம் ஆப்கானிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், முறையே 41 மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<