தொடர் தோல்விகளில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம் – குல்படீன் நயிப்

156
Image Courtesy - Getty Images

இம்முறை உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்து தோல்விகளை சந்திப்பது மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நயிப், இனிவரும் போட்டிகளில் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்வதாக நம்பிக்கை வெளியிட்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று (08) நடைபெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்துக்கு ஹெட்ரிக் வெற்றி

இந்தப் போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நியூசிலாந்து ஹெட்ரிக் வெற்றியைப் பெற்றுக்கொள்ள, ஆப்கானிஸ்தான் முன்னைய போட்டிகளைப் போல அனைத்து துறைகளிலும் பின்னடைவை சந்தித்து தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நயிப் அளித்த பேட்டியில்,

”நாங்கள் மூன்று போட்டிகளில் விளையாடி விட்டோம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தம்மால் முடியுமான ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தனர். உண்மையில் இது கடினமான போட்டி மாத்திரமல்லாது பலம் மிக்க அணியொன்றுடன் விளையாடினோம். அவர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் விளையாடியிருந்தனர்.

இந்தப் போட்டியில் நாங்கள் துடுப்பாட்டத்தில் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றோம். ஆனால் இணைப்பாட்டங்களை முன்னெடுப்பதில் எமது வீரர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஒரு போட்டியில் நாங்கள் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டால் மத்திய வரிசையில் தடுமாறுகிறோம். மற்றுமொரு போட்டியில் ஆரம்பத்தில் பிரகாசிக்கத் தவறி  மத்திய வரிசையில் சிறப்பாக விளையாடுகின்றோம்.

எனவே நாங்கள் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றாலும், 50 ஓவர்கள் விளையாட வேண்டும் என்பதை எமது வீரர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று இணைப்பாட்டங்களைப் பெற்றால் தான் எமக்கு சவாலான ஒரு ஓட்ட இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்க முடியும்” என தெரிவித்தார்.

அதேபோன்று, நியூசிலாந்து போன்ற பலம் மிக்க அணியுடன் விளையாடுகின்ற போது முடியுமான அளவு ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டால் தான் எமக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க முடியும்.

எது எவ்வாறாயினும், எமது பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஹமீட் ஹம்ஸா மற்றும் அப்தாப் அலாம் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். ஆனால் குறைவான ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட காரணத்தால் எதிரணிக்கு எம்மால் நெருக்கடி கொடுக்க முடியாமல் போனது.

ஜேசன் ரோயின் துடுப்பாட்டம் இங்கிலாந்து அணிக்கு பலம் – இயன் மோர்கன்

தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது எமக்கு கவலையைக் கொடுத்தாலும், எமது வீரர்களின் மனநிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வருடங்களாக நாங்கள் சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடி பல வெற்றிகளைப் பெற்றோம்.

எமக்கு கிடைத்த வாய்ப்புகள் மூலம் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டோம். அதன் காரணமாகவே நாங்கள் இந்த இடத்தில் உள்ளோம். எனவே அடுத்துவரும் போட்டிகளில் எமக்கான அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி, தமது நான்காவது லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 15 ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<