AFC 23 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை B குழுவில்

482
AFC.com

தாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி B குழுவில் இடம்பெற்றுள்ளது.  

ஆசிய கண்டம் முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இந்த தகுதிகாண் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 44 அணிகள் மேற்கு மற்றும் கிழக்கு என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தகுதிகாண் சுற்றில் அணிகள் மோதவுள்ளன.   

நாணய சுழற்சியில் சாப் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

இந்த தகுதிகாண் போட்டிகளுக்கு அணிகளை குழுநிலையாக பிரிக்கும் குலுக்கல் முறை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புதன்கிழமை இடம்பெற்றது. இதன்படி இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி மேற்கு மண்டலத்தில் B குழுவில் பஹ்ரைன், பங்களாதேஷ் மற்றும் பலஸ்தீனத்துடன் மோதவுள்ளது.

B குழுவுக்கான போட்டிகளை பஹ்ரைன் நடத்துவதோடு இலங்கைக்கு முக்கியமாக பஹ்ரைன் சவாலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பஹ்ரைன் நான்காவது முறையாக 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் தகுதிபெறவே களமிறங்குகிறது. எனினும், இந்த தொடருக்கு இலங்கை இதுவரை தகுதி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இந்த ஆண்டு நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதலாம் இடத்தை பெற்ற உஸ்பகிஸ்தான் F குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இதே குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவில் நான்காவது அணியாக தஜிகிஸ்தான் உள்ளது.   

23 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் தொடரில் மூன்றாவது முறை தகுதிபெறும் நோக்கில் கட்டார் A குழுவில் மோதவுள்ளதுடன், குறித்த குழுவுக்கான போட்டிகளையும் நடத்தவுள்ளது. இந்தக் குழுவில் ஓமான், நேபாளம் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. ஈரான் C குழு போட்டிகளை நடத்தவிருப்பதோடு இந்தக் குழுவில் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் முதல் சம்பியனான ஈராக், துர்க்மனிஸ்தான் மற்றும் யெமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.  

கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரில் இரண்டாவம் இடத்தை பெற்ற சவூதி அரேபியா D குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தக் குழுவில் போட்டிகளை நடத்தும் ஐக்கிய அரபு இராச்சியம், லெபனான் மற்றும் மாலைதீவு அணிகள் உள்ளன.   

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது AFC 23 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நாடுகளில் ஒன்றான குவைட் 2020 தொடருக்கு முன்னேற E குழுவில் ஜோர்தான், சிரியா மற்றும் கிர்கிஸ் குடியரசு அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

எப்.ஏ கிண்ண காலிறுதியில் மோதப்போகும் அணிகள்

வான்டேஜ் நிறுவனத்தின் …

இதுவரை AFC 23 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் போட்டியில் தகுதி பெறாத கம்போடியா தகுதிகாண் சுற்றின் H குழுவுக்கான போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தக் குழுவில் தென் கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் சீன தாய்ப்பேய் அணிகள் இடம்பெற்றுள்ளன.

2016 சம்பியனான ஜப்பான் தகுதிச் சுற்றில் I குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தக் குழுவில் மியன்மார், திமோர்லெஸ்ட் மற்றும் மகாவு அணிகள் உள்ளன.

J குழு போட்டிகளை மலேசியா நடத்துவதோடு இந்தக் குழுவில் சீனா, லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. 2018 AFC 23 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்ற வியட்நாம் அணியினர் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் புரூனெய் தாருஸ்ஸலாம் அணிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

தகுதிகாண் சுற்றின் 11 குழுக்களில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகளுடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும் சிறந்த நான்கு அணிகள் 2020 AFC 23 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும். இதில் போட்டியை நடத்தும் தாய்லாந்து அணி நேரடியாக தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

AFC.com