இந்திய கிரிக்கெட்டிலும் நிற பேதமா? தமிழக வீரர் அபினவ் முகுந்த் வேதனை

1293
Abhinav Mukund

விளையாட்டு உலகில் நிற பேதம் மற்றும் இன பாகுபாடு என்பது அதிகளவில் இல்லாவிட்டாலும், ஒரு சில நாடுகளிலும் குறிப்பிட்ட சில போட்டிகளில் அதன் தாக்கமும் நடைமுறைப்படுத்தலும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. குறிப்பாக சுமார் 175 வருடகால வரலாற்றைக் கொண்ட கிரிக்கெட் விளையாட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.

கிரிக்கெட்டின் தாயகமாக இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் இதன் தாக்கம் அதிகளவில் காணப்பட்டாலும், தற்போது அது தலைகீழாக மாறியுள்ளதை அனைவராலும் அவதானிக்க முடியும். ஆனால் தென்னாபிரிக்காவில் நிலவிய நிற பேதம் காரணமாக ஒரு காலத்தில் அந்நாட்டு அணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது. இதன் விளைவாகவே, தற்போது அந்நாட்டிலுள்ள கிரிக்கெட் உள்ளிட்ட பெரும்பாலான விளையாட்டுகளில் கறுப்பினத்தவர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது.  

கௌரவத்தை காக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இலங்கை

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி தொடர் முழுவதிலும் தோல்வி அடையும் நெருக்கடியை தவிர்க்கும் ஒரு கௌரவப்…

இந்நிலையில், உலக கிரிக்கெட்டின்பிக் 3” நாடுகளில் ஒன்றாக விளங்குகின்ற இந்தியாவிலும், இதுபோன்ற நிற பேதம் மற்றும் இன பாகுபாடுகளைக் கொண்டு வீரர்களை அணிக்குத் தெரிவு செய்கின்ற நடைமுறை அரிதாக இருந்தாலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து ஒரு சில போட்டிகளில் விளையாடி வருகின்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரரான அபினவ் முகுந்த் நிற பேதம் காரணமாக தான் சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக முதற்தடவையாக தெரிவித்துள்ளமை விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக அபினவ் முகுந்த் உள்ளார். 27 வயதான இவர், 120 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2016-2017 பருவகாலத்தில் 62.44 என்ற சராசரியுடன் 1,124 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், இம்முறை முதல்முறையாக பகலிரவு போட்டியாக நடைபெற்ற துலிப் கிண்ணத் தொடரில் சதம் குவித்த முதல் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பெற்றார்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 320 ஓட்டங்களைக் குவித்துள்ளார். கடந்த சில காலங்களாக இந்திய உள்ளூர் போட்டிகளில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்து வருகின்ற இவர், கடந்த பெப்ரவரி மாதம் பங்களாதேஷ் அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளதுடன், காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி அரைச்சதம் கடந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இவரது நிறத்தை கேலி செய்து இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் சிலர் குறுந்தகவல் மற்றும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த இனவெறி கருத்தினால் கடும் அதிருப்தியும் வேதனையும் அடைந்த அபினவ் முகுந்த், இதுபற்றி டுவிட்டரில் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசேட செய்தியை அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளார்.

அதில் அபினவ் கூறுகையில் நான் 10 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். சிறிது சிறிதாக முன்னேறி தற்போதைய நிலையை அடைந்துள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். இதை நான் எழுதுவதற்குக் காரணம், அனுதாபம் பெறுவதற்காகவோ அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ அல்ல. ஒரு பிரச்சினை தொடர்பாக மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

15 வயது முதல் இந்தியா முழுக்கவும் இந்தியாவுக்கு வெளியேயும் பயணம் செய்து வருகிறேன். சிறுவயது முதல் என் நிறம் குறித்த மக்களின் எண்ணம் எனக்கு எப்போதும் புதிராக இருக்கும். கிரிக்கெட் அறிந்தவர்கள் இவ்விடயத்தை நன்கு அறிவார்கள்.

பாகிஸ்தானின் வாய்ப்பை தட்டிப் பறித்த இலங்கை

இந்நிலையில் ஐ.சி.சியில் அங்கம் வகிக்கின்ற அனைத்து நாடுகளும் 2017ஆம் – 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச போட்டி

வெயிலில் நாள் முழுக்க நான் பயிற்சி மேற்கொள்வேன். என் நிறம் மாறியதற்காகவோ குறைந்ததற்காகவோ ஒருமுறையும் நான் வருத்தப்பட்டதில்லை. ஏனெனில் நான் எதில் ஈடுபடுகிறேனோ அதை விரும்பிச் செய்கிறேன். வெயிலில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டதாலேயே என்னால் சில உயரங்களைத் தொட முடிந்தது. இந்தியாவின் அதிக வெப்பப் பகுதியான சென்னையைச் சேர்ந்தவன் நான். என் இளமைக்காலம் முழுக்க மைதானங்களில் கழிந்துள்ளது.

என்னை வெவ்வேறு விதமான பெயர்களில் அழைத்துள்ளார்கள். சிரித்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேன். ஏனெனில் எனக்குப் பெரிய லட்சியங்கள் உண்டு. சிறுவயதில் இதனால் பாதிக்கப்பட்ட நான் பிறகு மனபலம் கொண்டவனாக மாறினேன். அவை என்னைக் கீழே தள்ளமுடியாது. என்னை அவமானப்படுத்தும் போது பெரும்பாலான நேரங்களில் அதற்கு நான் எதிர்வினை செய்வதில்லை.

இன்று நான் எனக்காக மட்டும் இதைப் பேசவில்லை. என்னைப் போன்று நம் நாட்டில் தோலின் நிறத்தைக் கொண்டு ஏளனத்தைச் சந்திக்கும் அனைவருக்காகவும் பேசுகிறேன். சமூக வலைத்தளங்களினால் இந்தப் போக்கு இன்னும் மோசமாகியுள்ளது. சிவப்பழகு மட்டுமே அழகல்ல நண்பர்களே. நான் வெளியிட்ட கருத்து இந்திய அணியில் யாரையும் குறிப்பிட்டு அல்ல. எனது நிறம் குறித்து ஏளனத்துடன் பேசுபவர்களுக்கு மாத்திரமே ஆகும். எனவே, உங்கள் நிறத்துடன் உண்மையாக வாழுங்கள், இலட்சியத்தில் கவனம் செலுத்துங்கள், சௌகரியமாக இருங்கள்என்று அபினவ் முகுந்த் ஆதங்கத்துடன் குறித்த பதிவை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, அபினவ் முகுந்த்தினால் பதிவேற்றப்பட்ட இந்த டுவிட் பதிவுக்கு இதுவரை 2000இற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ள அதேநேரம், 1000 தடவைகள் அதை பதில் டுவிட் செய்துள்ளனர். அத்துடன் இந்திய அணித்தலைவர் விராத் கோலி, very well said Abhinav என்றும், அஷ்வின் Read and learn, don’t make it a headline cos its some ones emotion என்றும் டுவிட் செய்துள்ளதுடன், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டி உள்ளிட்ட வீரர்களும் இந்த பதிவிற்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, விளையாட்டில் நிற பேதம் மற்றும் இன பாகுபாட்டுக்கு முன்னுரிமை அளித்தால் ஒருபோதும் அந்த நாடு விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் அடையாது. மாறாக திறமையான வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து தரப்பிலும் உள்ள திறமையான வீர்ரகளுக்கு வாய்ப்பு வழங்கினால் ஒரு புறத்தில் விளையாட்டு முன்னேற்றம் காணும். மறுபுறத்தில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்பட்டு எந்தவொரு முரண்பாடுகளுமின்றி அனைத்து மக்களும் விளையாட்டை நேசிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அபினவ் முகுந்த்தின் டுவிட்டர் பதிவு

Mukunth's twit