தேசிய மட்ட வீரர்களுக்கு விரைவில் தொழில் வாய்ப்பு – விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி

151

தேசிய மட்டத்தில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற அனைத்து வீரர்களுக்கும் இவ்வருடம் முதல் கல்வித் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டின் புள்ளி விபரங்கள் மற்றும் 2018ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு இன்று (04) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”க.பொ.த உயர்தரப் பரீட்சையை எழுதிவிட்டு வெளியேறுகின்ற மாணவர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விளையாட்டுத்துறையை விட்டு விலகிச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலையை காணமுடிகின்றது.

எனவே இந்நிலையை கருத்திற்கொண்டு அண்மையில் நான் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தேன். அதற்கான அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. அத்துடன், தற்போதுள்ள விளையாட்டு சட்ட மூலத்தையும் அமைச்சரவை அனுமதியுடன் மாற்றியமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

இதன்படி, தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி, அந்தந்த விளையாட்டு சங்கங்களின் தேசிய குழாமில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனால் குறித்த வீரர்களுக்கு நிரந்தரமான தொழிலொன்று கிடைப்பதுடன், விளையாட்டையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் குறித்த வீரர்களின் உடற்தகுதி, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்திக்கொண்டு இராணுவம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் பங்களிப்பினை தொடர்ந்து பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள்

அதேபோன்று, குறித்த நிறுவனங்களில் தொழில் புரிகின்ற தேசிய குழாமில் உள்ள வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் இதன் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேநேரம் இவ்வருடம் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் கடந்த வருடம் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட நிதி தொடர்பிலும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

தேசிய உடற்பயிற்சி வாரம்

இந்நாட்டிலுள்ள மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்ற தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் கடந்த 2 வருடங்களாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முன்னெடுத்து வருகின்ற தேசிய உடற்பயிற்சி வாரம் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 02ஆம் திகதி வரை நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிராம சேவர்களுக்கான விளையாட்டு விழா

தேசிய விளையாட்டு விழாவின் மற்றுமொரு அங்கமாக இவ்வருடத்திலிருந்து நாட்டிலுள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கிடையில் 4 பிரவுகளாக தேசிய மட்ட விளையாட்டு விழா நடத்தப்படவுள்ளது. இதில் கிராம சேவகர்கள் மற்றும் அங்குள்ள அரச அதிகாரிகள் கலந்துகொள்ள முடியும். இதில் வெற்றிபெறும் கிராம சேவர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறுவர். இப்போட்டிகள் அனைத்தும் மார்ச் 15ஆம் திகதி முதல் ஜுன் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக கிராமசேவகர் மட்டப் போட்டிகளுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், மாவட்டப் போட்டிகளுக்கு 2 இலட்சம் ரூபாவும், மாகாண மட்டப் போட்டிகளுக்கு 3 இலட்சம் ரூபாவும் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 முதல் 14 வரை இரத்தினபுரியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ளது.

பொழுதுபோக்கு விளையாட்டு கிராமம்

பத்தரமுல்லையில் உள்ள வோர்டஸ் ஏட்ஜ் (Waters Edge) நிறுவனத்தின் 16 ஏக்கர் நிலப்பரப்பில் பொழுதுபோக்கு விளையாட்டு கிராமம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி கூடைப்பந்து, கால்பந்து, துப்பாக்கி சுடுதல், ஆர்செறி, வலைப்பந்தாட்டம் ஆகியன போன்று 10 விளையாட்டுக்களை அங்கு ஸ்தாபிக்க எதிர்பாரத்துள்ளோம். அதிலும் குறிப்பாக கொரிய அரசினால் தைக்கொண்டோ உள்ளக விளையாட்டு அரங்கும், காலசார மத்திய நிலையமும், அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களினால் உள்ளக கிரிக்கெட் மைதானமும் அங்கு நிர்மானிக்கப்படவுள்ளது.

நுவரெலியாவில் அதியுயர் விளையாட்டு பயிற்சிக்கூடம்  

நுவரெலியாவில் நிர்மானிக்கப்படவுள்ள அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சிக்கூடக் கட்டடத்தொகுதியின் நிர்மானப் பணிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்பிப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் Ellipse project SAS நிறுவனத்தின் 75.53 மில்லியன் யூரோ முதலீட்டுடன் இப்பயிற்சிகூடம் நிர்மானிக்கப்படவுள்ளது.

சுகததாஸ செயற்கை ஓடுபாதை பெப்ரவரியில் பாவனைக்கு

நீண்டகாலமாக பயன்படுத்த முடியாமல் இருந்த சுகததாஸ செயற்கை ஓடுபாதையின் நிர்மானப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வரவுள்ளது. இதன்படி, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகளை அங்கு நடத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுகததாஸ உள்ளக அரங்கின் நவீனமயப்படுத்தலுக்கும் இவ்வருடம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதேநேரம் நீண்டகாலமாக புனர்நிர்மானம் செய்யப்படாமல் உள்ள மாத்தளை ஹொக்கி மைதானத்தையும் இவ்வருடம் புனர்நிர்மானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டுக்கு விசேட வேலைத்திட்டம்

இந்த வருடம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் முதலாவது நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம் அன்று ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. இதனையடுத்து ஜனவரி 24ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர், ”23ஆம் திகதி பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அன்றைய தினம் இரவு ஜனாபதிக்கு கையளிக்கவுள்ளோம். இலங்கை விளையாட்டு ரசிகர்களுக்கு மிகப் பெரிய சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது. அத்துடன், இப்பயணத்தின் பிரதான அனுசரணையாளரான கொகா கோலா நிறுவனத்துடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். அதன்போது இலங்கையின் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர்கள், எதிர்வரும் காலங்களில் கால்பந்து விளையாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தனர். இது எமக்கு கிடைக்கவுள்ள மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். எனவே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற கால்பந்து விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கு விசேட பட்டப்பிடிப்பு

விளையாட்டின் முன்னேற்றத்துக்காக ஊடகங்களால் மிகப் பெரிய அழுத்தங்களை கொடுக்க முடியும். விளையாட்டுத்துறையில் நாளுக்கு நாள் ஏற்படுகின்ற தொழில்நுட்ப மாற்றங்கள், தற்போதைய நிலவரங்கள் மற்றும் அதனுடைய எதிர்கால நிலைப்பாட்டை தொடர்ந்து அவதானித்து மக்களை தெளிவுபடுத்துகின்ற பொறுப்பு உள்ளிட்டவைகளை ஊடகவியலாளர்கள் செய்துவருகின்றனர். எனவே இந்நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக பக்கசார்பற்ற செய்திகளை மக்களுக்காக வழங்கும்படி இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், இந்நாட்டிலுள்ள விளையாட்டு ஊடகவியலாளர்களுக்கு களனி பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விளையாட்டு தொடர்பான பட்டப்படிப்பை பெற்றுக்கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.