மீண்டும் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார் அனித்தா

522
95th National athletics championship Anith broke a record

தற்பொழுது நடைபெற்று வரும் 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் மீண்டுமொருமுறை புதிய தேசிய சாதனை படைத்தார்.

அவர் குறித்த போட்டியில் 3.47 மீற்றர் உயரம் தாவி, இம்முறை போட்டித் தொடரில் தேசிய சாதனை படைத்த முதல் வீரராகவும் இடம்பிடித்தார். முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளில் 3.46 மீற்றர் உயரம் தாவி புதிய தேசிய சாதனை படைத்த அவர், ஒரு வருட காலப்பகுதியில் அதே சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் அனித்தா

இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் சாதனை நாயகியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த…

95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகின. இந்நிலையில் போட்டிகளுக்கான 2ஆம் நாளான இன்று காலை பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி நடைபெற்றது. அண்மைக்காலமாக கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான அனித்தா உள்ளிட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் இப்போட்டியில் போட்டியிட்டிருந்தனர்.

இதில், கடந்த சில வருடங்களாக தேசிய அரங்கில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைக்கு மேல் சாதனைகளைப் படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், பாடசாலை மட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பங்குபற்றிய முதலாவது தேசிய மட்டப் போட்டியாக இது அமைந்திருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் 3.30 மீற்றர் உயரத்தைத் தாவிய அனித்தா, பிறகு 3.47 மீற்றர் உயரத்துக்கான முயற்சியை மேற்கொண்டார். அதன் முதல் முயற்சியில் தோல்வி கண்ட அவர், 2ஆவது முயற்சியில் வெற்றி கொண்டு புதிய சாதனை படைத்தார். எனினும் 3.50 மீற்றருக்காக அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளையும் அவரால் வெற்றிகொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.   சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல சாதனைகளுடன் நிறைவுற்ற ஆசிய மெய்வல்லுனர் தெரிவுகாண் போட்டிகள்

நடைபெறவிருக்கும் ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணியை…

தேசிய சாதனை படைத்த பிறகு  ThePapare.com இணையளத்தளத்துக்கு அனித்தா வழங்கிய விசேட செவ்வியில்,

”தேசிய சாதனையை மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் பாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தகுதிபெறுவதற்கான பயிற்சிகளை தற்போது முதல் நான் முன்னெடுத்துள்ளேன். எனவே, 3.80 மீற்றராக உள்ள ஆசிய அடைவு மட்டத்தை விரைவில் எட்டுவதற்கு எண்ணியுள்ளேன். அதற்கான எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இப்போட்டியில் இலங்கை விமானப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட எஸ்.பி ரணசிங்க 3.20 மீற்றர் உயரம் தாவி 2ஆவது இடத்தையும், யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட யாழ். மகாஜனாக் கல்லூரி மாணவியான சந்திரசேகர் செரீனா, 3.00 மீற்றர் உயரம் தாவி 3ஆவது இடத்தையும் பெற்று தேசிய மட்டத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

முன்னதாக இவ்வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் 3.01 மீற்றர் உயரத்தை தாவி புதிய போட்டிச் சாதனை படைத்த செரீனா, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் போட்டிகளில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனை படைத்ததுடன், அதே போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவியான செரீனாவின் பயிற்சியாளராகவும் சி. சுபாஸ்கரன் செயற்பட்டு வருகின்றார்.