இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றதுடன், போட்டித் தொடரின் இறுதி நாளான இன்று (02) 16 இறுதிப் போட்டிகள் இடம்பெற்றதுடன், இதில் 2 போட்டி சாதனைகளும், ஒரு போட்டி சாதனை சமப்படுத்தலும் நிகழ்த்தப்பட்டன.

இதன்படி, கடந்த 3 தினங்களாக நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3 தேசிய சாதனைகள், 8 போட்டி சாதனைகள் மற்றும் ஒரு போட்டி சாதனை சமப்படுத்தலும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தடை தாண்டலில் இல்ஹாமுக்கு 2ஆம் இடம்

ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டல் இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவருகின்ற ஆர்.வொஷிம் இல்ஹாம், போட்டித் தூரத்தை 14.57 செக்கன்களில் நிறைவு செய்து இவ்வருடத்துக்கான தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்தார்.

முன்னதாக நேற்று முன்தினம் (31) நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட அவர், போட்டித் தூரத்தை 14.75 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் முதற்தடவையாக கலந்துகொண்ட வொஷிம், 15.20 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், ”போட்டியின் முதல் மூன்று சட்டவேலிகளைப் கடக்க முயன்றபோது தவறான பாய்ச்சலை மேற்கொண்டேன். இதன் காரணமாக சற்று பின்னடைந்தேன். எனினும், எனது தனிப்பட்ட காலத்தை மீண்டும் புதுப்பிக்க கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். அத்துடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இராணுவ மெய்வல்லுனர் சம்பின்ஷிப் போட்டிகளில் பங்குபற்றி எனது சிறந்த காலத்தைப் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியின் பிறகு ஜெயலால் ரத்னசூரியவிடம் பயிற்சிகளைப் பெற்றுவந்த வொஷிம், தற்போது விளையாட்டுத்துறை அதிகாரியும் பயிற்றுவிப்பாளருமான மஞ்சுள ராஜகருணாவிடம் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஹசித நிர்மால், 14.48 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக வொஷிமுடன் முதல் சுற்றில் கலந்துகொண்டு 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஹசித, குறித்த போட்டியை 14.83 செக்கன்களில் நிறைவு செய்திருந்ததுடன், இலங்கை கடற்படையைச் சேர்ந்த எஸ். அமரதுங்க, 14.57 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

நீளம் பாய்தலில் மிப்ரானின் முயற்சி வீண்

தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள வீரர்கள் பங்கேற்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் மிப்ரான், 7.72 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இவர் 7.34 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.72 மீற்றர் நீளம் பாய்ந்து தேசிய விளையாட்டு விழாவில் தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியை மிப்ரான் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள்

இந்நிலையில் 7.97 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த இலங்கை விமானப் படையைச் சேர்ந்த எம். லியனபதிரன முதலிடத்தையும், 7.84 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த இலங்கை பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தனுஷ்க சந்தருவன் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

200 மீற்றரில் ராஜாஸ்கான், பாஸிலுக்குத் தோல்வி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மொஹமட் ரஜாஸ்கான் (21.71செக்கன்கள்) மற்றும் மொஹமட் பாஸில் உடையார் (21.99 செக்கன்கள்) ஆகியோர் 4 மற்றும் 6ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்திய வீரர்களான திலிப் ருவன் (21.49 செக்கன்கள்) முதலிடத்தையும், எஸ்.எஸ் குமார (21.50 செக்கன்கள்) 2ஆவது இடத்தையும், காலிங்க குமாரகே (21.52 செக்கன்கள்) 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த வீரராக மஞ்சுள குமார தெரிவு

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இலக்காகக் கொண்டு தேசிய குழாமுக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராக தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் கடந்த 3 தினங்களாக நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனீத்தா ஜெகதீஸ்வரன், ஆண்களுக்கான டெகத்லனில் (10 வகை போட்டி) அஜித் குமார கருணாதிலக மற்றும் பெண்களுக்கான ஹெப்டத்லனில் (7 வகை போட்டி) இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட லக்‌ஷிகா சுகன்தி ஆகியோர் புதிய தேசிய சாதனை நிகழ்த்தியதுடன், பெண்களுக்கான 1500 மீற்றரில் கயன்திகா அபேரத்ன, பெண்களுக்கான குண்டு எறிதலில் தாரிகா பெர்ணான்டோ, ஆண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டலில் எம்.எஸ் புஷ்பகுமார, பெண்களுக்கான முப்பாய்ச்சலில் விதூஷா லக்‌ஷானி மற்றும் பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் அயேஷா தமயன்தி ஆகியோர் புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினர்.

இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட இஷார சந்தருவன், 5.00 மீற்றர் உயரத்தைத் தாவி, கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் அவரால் நிகழ்த்தப்பட்ட சாதனையை சமப்படுத்தினார்.

இதேவேளை 2.21 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான உயரம் பாய்தலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை விமானப்படையைச் சேர்ந்த மஞ்சுள குமார இப்போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.