உலகிலுள்ள அனைத்து மக்களையும் இன, மத, மொழி வேறுபாடின்றி இணைக்கின்ற சக்தியும், வல்லமையும் விளையாட்டுக்கு உண்டு.

அதிலும் குறிப்பாக கால்பந்து, கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுகளுக்கும் அதில் ஈடுபடுகின்ற வீரர்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், வெற்றிக்காக வேண்டி அல்லது வேறு காரணங்களுக்காக விளையாட்டுகளின் போது வீரர்கள் மைதானத்திற்குள்ளேயும், வெளியேயும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது, சூதாட்ட சர்ச்சைகளில் சிக்குவது, விளையாட்டு சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையான முறையில் செயற்படுவது போன்ற விடயங்கள் விளையாட்டு உலகில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் இவ்வாறான சம்பவங்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். இதில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய போன்ற முக்கிய அணிகள் இவ்வாறான சம்பவங்களில் அதிக ஈடுபாடுடைய அணிகளாகவும் இருந்து வருகின்றதை வரலாறுகள் சான்று பகர்கின்றன.

இந்நிலையில், இவ்வருடத்தில் கிரிக்கெட் அரங்கில் சூதாட்ட சர்ச்சை, வீரர்களின் மோசமான நடத்தை போன்ற சம்பவங்களால் வீரர்கள் நீக்கம், போட்டித் தடை தொடர்பில் பெரிதும் பேசப்பட்ட அணியாக பாகிஸ்தான் விளங்குகின்றது. இதில் கடந்த பெப்ரவரி மாதம் டுபாயில் நடைபெற்ற 2ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் 6 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டமை மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், அவ்வாறு குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட 2 முக்கிய வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் தலா 5 வருடகால போட்டித் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பாகிஸ்தான் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தரை பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சித்த குற்றத்திற்காக பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு அதிரடி நட்சத்திர வீரரான உமர் அக்மலுக்கு 3 மாதகால போட்டித் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்திருந்தமை கிரிக்கெட் அரங்கில் பரவலாக பேசப்படுகின்ற தலைப்பாக மாறிவிட்டது.

முன்னதாக பாகிஸ்தான் அணி கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தலைவராகச் செயற்பட்ட சல்மான் பட் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் ஆமீர், மொஹமட் ஆசிப் ஆகியோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூவருக்கும் ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டதுடன், சிறைத்தண்டணையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்ஜீல், காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 வருடகால போட்டித் தடை

(AP Photo/K.M. Chaudary)

டுபாயில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற 2ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 தொடரில் நடப்புச் சம்பியனான இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடிய சர்ஜீல் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் அணியின் 6 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சர்ச்சையில் ஈடுபட்ட முக்கிய வீரராக விளங்கிய சர்ஜீல் கான் மற்றும் காலித் லத்தீப் மீதான விசாரணைகளை மும்முரமாக விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அந்நாட்டு கிரிக்கெட் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலான விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாதென தீர்ப்பளித்தது. இதன்படி முதல் இரண்டரை வருடத்தில் குறித்த வீரர்களுக்கு எந்தவொரு உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிளிலும் விளையாட முடியாது என்பதுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவர்களது நடத்தை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவுள்ளது.

எனினும் சர்ஜீல் மற்றும் காலித் லதீபுக்கு சுமார் 30 மாதங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாவிட்டாலும், அந்நாட்டு கிரிக்கெட் சபை விரும்பினால் உள்ளூர் மட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சாமர சில்வா மீதான தடை தற்காலிகமாக நீக்கம்

கிரிக்கெட் மகத்துவத்துக்கு கேடு விளைவித்த குற்றத்துக்காக இலங்கை…

குறித்த போட்டியில் பெஷாவர் சல்மி அணியை இஸ்லாமாபாத் அணி வீழ்த்தியிருந்தாலும், சர்ஜீல் கானுக்கு 2 மில்லியன் ரூபா பணத்தை சூதாட்ட முகவரால் வழங்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. மேலும் சர்ஜீல் மாத்திரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி 4 பந்துகளுக்கு மாத்திரம் முகங்கொடுத்து ஒரு ஓட்டத்தைப் பெற்று LBW முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் காலித் லத்தீப் இப்போட்டியில் விளையாடவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நசீர் ஜம்ஷித், கடந்த 8ஆம் திகதி வட்ஸ்அப் (Whatsapp) மூலமாக இஸ்லாமாபாத் யுனைடட்டின் காலித் லத்தீப்புக்கு குறுந்தகலொன்றை அனுப்பி யூசாப் என்ற தரகரை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியில் பிரகாசித்துவந்த சுல்பிகர் பாபர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சஹ்ஷப் ஹஸன், மொஹமட் இர்பான் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோரும் சூதாட்ட சர்ச்சை தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறித்த வீரர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்ததுடன், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இடைக்காலத் தடையும் விதித்தனர்.

இந்நிலையில், லாஹூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஷ்கர் ஹைதர் தலைமையிலான மூவரடங்கிய விசேட குழுவொன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்தது. இக்குற்றச்சாட்டின் ஆரம்ப குற்றவாளிகளான சர்ஜீல் கான் மற்றும் காலித் லதீப் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நிறைவுக்கு வந்த நிலையில், இதுதொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அஷ்கர் ஹைதர் தலைமையிலான மூவரடங்கிய விசேட குழு குறித்த சூதாட்ட சர்ச்சையின் பிரதான சந்தேக நபராக விளங்கிய சர்ஜீல் கானுக்கு 5 வருட போட்டித் தடை மற்றும் 2 மில்லியன் ரூபா அபராதத்தை முதலில் விதிப்பதாக கடந்த மாதம் அறிவித்ததுடன், அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்த காலித் லத்தீபுக்கு 5 வருடகால போட்டித்தடையும் ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, குறித்த வீரர்கள் இருவருக்கும் பெப்ரவரி 10ஆம் திகதியிலிருந்து இத்தடை அமுலுக்கு வரவுள்ளதுடன், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் அவர்களது போட்டித் தடை நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்காக 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்த 28 வயதான சர்ஜீல் கான் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்ததுடன், கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வந்த 31 வயதான காலித் லத்தீப், 2008ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், இதுவரை 5 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள காலித், இறுதியாக கடந்த கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற டி20 போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நவாஸுக்கு 2 மாத கால தடை

குறித்த சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் நவாஸுக்கு 2 மாதகால போட்டித் தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

23 வயதான நவாஸ், கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்று அதே ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை…

எனினும், இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடிய அவர், தன்னை சூதாட்ட தரகர் அனுகியமை தொடர்பில் பாகிஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த காரணத்தால் அவருக்கு 2 மாதகால போட்டித்தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் நிறைவடைந்த உலக பதினொருவர் அணியுடனான டி20 தொடரில் இடம்பெற்று அவர் விளையாடியிருந்ததுடன், சூதாட்ட சர்ச்சையின் பிறகு அவ்வணியில் இடம்பெற்று விளையாடிய முதலாவது வீரராகவும் மாறினார்.

மொஹமட் இர்பானின் போட்டித் தடை நிறைவு

(AP Photo/K.M. Chaudary)

2ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இடம்பெற்ற சூதாட்டத்துடன் தொடர்புடையதாகவும், சூதாட்டத் தரகருடன் தொலைபேசியில் சம்பவ தினத்தன்று உரையாடியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட இஸ்லாமாபாத் யுனைடட் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் இர்பான், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்திருந்ததுடன், சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இர்பானுக்கு முதலில் ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டு பின்னர் அது 6 மாதகாலமாக குறைக்கப்பட்டதுடன், ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன் இவ்வருடத்துக்கான பாகிஸ்தான் வீரர்களுக்கான ஒப்பந்தத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். எனினும் கடந்த 6 மாதங்களாக எந்தவொரு போட்டியிலும் விளையாடாத இர்பான், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விழிப்புணர்வு செயலமர்வுகளிலும் கலந்துகொண்டதுடன், விசேட பயிற்சிகளிலும் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் இர்பானுக்கு எதிராக விதிக்கப்பட்ட போட்டித்தடை கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்ததையடுத்து மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். பாகிஸ்தானின் டவ்ன் செய்திச் சேவைக்கு இர்பான் வழங்கிய விசேட செவ்வியில், ”எதிர்பாராத விதமாக 6 மாதகால போட்டித் தடைக்கு உள்ளானமை எனது வாழ்க்கையில் சந்தித்த மறக்கமுடியாத அனுபவமாகும். கிரிக்கெட் வீரரொருவர் தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்ற காலத்தில் இவ்வாறு போட்டித் தடைகளுக்கு உள்ளாவது அந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்” என்றார்.

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கு முன்னால் மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வதை இலக்காகக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சூதாட்ட சர்ச்சையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு போட்டித் தடைக்குள்ளாகியிருந்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் இர்பான், அடுத்த மாத இறுதியில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கையுடனான டி20 போட்டியில் களமிறங்கவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

35 வயதான மொஹமட் இர்பான், இதுவரை 4 டெஸ்ட், 60 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகளைப் புறக்கணிக்கும் இரு வீரர்கள்

குறித்த சூதாட்டத்தில் தொடர்புடையவர் என இனங்காணப்பட்டுள்ள மற்றுமொரு வீரரான நசீர் ஜம்ஷித் இதுவரை எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகவில்லை. எனினும், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இடம்பெற்றதாக கூறப்படும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய மூன்றாவது வீரர் இவராவார். இந்நிலையில், சர்வதேச கிரிககெட் பேரவையின் பங்களிப்புடன் பிரித்தானியாவின் சர்வதேச ஊழல் மோசடி தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் வைத்து நசீர் ஜம்ஷிட்டுடன், அவருடைய நண்பரான யூசுப் என்பவரும் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழுவில் அவர் சார்பில் ஆஜரான வழக்கிறிஞர் அந்நாட்டு கிரிக்கெட் சபை பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

27 வயதான நசிர் ஜம்ஷித், பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 2 டெஸ்ட், 48 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

(AP Photo/K.M. Chaudary)

இந்நிலையில், இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடிய அவ்வணியின் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய 25 வயதான சஹ்ஷைப் ஹஸனுக்கு குறித்த சூதாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், குறித்த சூதாட்டத்தில் ஈடுபட்ட 5ஆவது வீரராகக் கருதப்பட்ட சஹ்ஷைப், அவ்வாறு சூதாட்ட தரகரொருவர் தன்னை அணுகியமை தொடர்பில் பாகிஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு அறிவிக்க தவறிய குற்றச்சாட்டில் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் கடந்த மார்ச் மாதம் போட்டித்தடை விதித்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன் பல தடவைகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்த சஹ்ஷைப் ஹஸன் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவுக்கு வரவில்லை.

பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 3 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் சஹ்ஷைப் ஹஸன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உமர் அக்மலுக்கும் போட்டித்தடை

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஒழுங்கீனமற்ற வீரராக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உமர் அக்மல், அவ்வணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோசமான மொழியில் வசைமாரி பொழிந்ததாகவும், தேசிய கிரிக்கெட் அகடமியின் வசதிகளைத் தான் பயன்படுத்துவதற்கு தடை விதித்தார் என்று மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டொன்றை கடந்த மாதம் முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடியாக உமர் அக்மலின் ஆவேசத்தைக் கண்டித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு பிடியாணை அனுப்ப நடவடிக்கையும் எடுத்திருந்தது.

ஜோன் கீல்ஸ், எல். பி பினான்ஸ் அணிகளுக்கு இலகு வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25ஆவது தடவையாகவும் நடைபெறும்…

இதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்த விதிமுறைகளை மீறி உள் விவகாரங்களை வெளியில் சொன்ன குற்றச்சாட்டில் உமர் அக்மலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அந்நாட்டு கிரிக்கெட் சபை விசாரணைக்குழுவொன்றையும் அமைத்தது.

இந்நிலையில், குறித்த விசாரணைகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் உமர் அக்மலுக்கு அடுத்துவரும் 3 சர்வதேச அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் 2 மாதங்களுக்கு தடையில்லாச் சான்றிதழும் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள குளோபல் டி20 லீக் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பையும் அவர் இழந்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் இடம்பெற்ற தேசிய உயர் செயற்திறன் முகாமில் உமர் அக்மல் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு முழங்கால் காயம் ஏற்பட்டுள்ளதால் விலக வேண்டும் என்று உமர் அக்மல் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன், இத்தகவலை தேசிய அகடமியின் பயிற்சியாளர் முஷ்டாக் அஹமட்டிடமும் முறையிட்டார். அதன்பிறகு மேலதிக சிகிச்சைக்காக இங்கிலாந்து பயணமானார். எதிர்பார்த்ததைவிட மிக விரைவில் அவர் நாடு திரும்பினாலும் குறித்த முகாம் முடிந்துவிட்டது. ஆனால் மீண்டும் பயிற்சிக்காகச் சென்ற அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நுழைவாயிலில் வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் பயிற்சியாளர் நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து விரக்திக்கு உள்ளாள அக்மல், தனது தொலைபேசியினூடாக ஊடகவியலாளர்களுக்கு குறுந்தகவலொன்றை அனுப்பி உடனடியாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்து தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து ஊடகங்களைத் தெளிவுபடுத்தினார்.

‘நான் மறுசீரமைப்பு சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றிருந்தேன். அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சிக்காக சென்றிருந்தேன். ஆனால் பயிற்சியாளர்கள் யாரும் என் கூட இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை. ஏன் அனைத்து வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் என்னுடன் பணியாற்ற மறுக்கிறீர்கள் என்று கேட்டேன், அதற்கு, PCB இல் ஒப்பந்தம் பெற்ற வீரர்களுடன் பணியற்ற முடியும் என்றனர்.

நானும் பாகிஸ்தான் அணியின் சர்வதேச வீரர்தான், என் உடல்தகுதி ஒரு பிரச்சினைதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவர்கள்தானே உதவ வேண்டும்? நான் தெரிவுக்குழுவின் தலைவர் இன்சமாமை அணுகினேன், அவர் மிக்கி ஆர்தரின் பக்கம் கை காட்டினார். ஆர்தர் என்னை இன்சமாம் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார். அதுவும் இன்சமாம் முன்னிலையிலேயே, இது கீழ்த்தரமான செயல், இதனால் என் மனம் புண்பட்டது. என் உடல்தகுதி தேவைக்கான நிலையில் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதைத்தான் சரி செய்ய விரும்புகிறேன். ஆனால் எனக்கு உதவ மறுத்ததோடு, தேசிய கிரிக்கெட் அகடமிக்கு என்னை வரச்சொன்னது யார் என்று மிக்கி ஆர்தர் கேட்கிறார். அதுமட்டுமல்லாமல் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு வரக்கூடாது என்றும் கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். ஆனால் ஒரு பயிற்சியாளராக அவர் என் மீது வசைமாரி பொழியக்கூடாது. பாகிஸ்தானில் உள்ள அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கு இது சமமானது. எப்போதும் பயிற்சியாளர் யாராவது ஒரு வீரரைத் திட்டிக் கொண்டேயிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஒரு பாகிஸ்தானியாக என்னால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. கிரிக்கெட் அகடமிகள் ஒருவரது தவறைத் திருத்திக் கொள்ளத்தான் இருக்கிறது. என்னிடமிருந்து அனைத்தையும் பறித்து விட்டனர் என்றார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விளக்கம் கேட்டு அவருக்கு பிடியாணை அனுப்பியது. அதற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மன உளைச்சல் காரணமாக அவ்வாறான தவறை தாம் செய்து விட்டதாகத் தெரிவித்திருந்தார். அத்துடன், இதுபோன்ற தவறு மேற்கொண்டு ஏற்படாதவாறு நடந்து கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார். இந்நிலையிலேயே உமர் அக்மலுக்கு 2 மாத போட்டித் தடையுடன் 3 போட்டிகளில் விளையாடத் தடையும், ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

PCB இற்கு வாழ்வா? சாவா?

140 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் பல நட்சத்திர வீரர்களை உருவாக்கிய பெருமை பாகிஸ்தானுக்கு உண்டு. அதேபோல மைதானத்தில் எதிரணி வீரர்களை சீண்டுவது, ஒழுங்கீனமாக நடந்துகொள்வது, சூதாட்ட தரகர்களை நாடுவது போன்ற விடயங்களில் முன்னிலை வகிக்கின்ற அணியாகவும் பாகிஸ்தான் விளங்குகின்றது. இதில் மிகவும் பேசப்பட்ட ஒரு விடயமாக 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் முக்கிய 3 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் அதன்பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறிப்பிடலாம். அத்துடன் இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 வீரர்களுக்கு போட்டித்தடை விதித்த அந்நாட்டு கிரிக்கெட் சபை, 2 வீரர்களுக்கு தலா ஐந்தாண்டு போட்டித்தடை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஸாஹிரா கல்லூரியுடன் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்த புனித தோமியர் கல்லூரி

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட….

இவ்வாறு பணத்துக்காக தங்களது திறமையை பேரம் பேசுகின்ற வீரர்கள், தமது எதிர்காலத்தை வீணாக அழித்துக்கொள்வது கவலைக்குரிய விடயமாகும். பொதுவாக 35 வயதுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டாக கருதப்படுகின்ற கிரிக்கெட்டில், 5 வருடப் போட்டித்தடை என்பது அந்த விளையாட்டுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு செல்கின்ற காலப்பகுதியாகவும் இருக்கலாம். இதில் குறிப்பாக 2010ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு போட்டித்தடைக்குள்ளான அப்போது 25 வயதுடைய வீரராக இருந்த சல்மான் பட்டுக்கு தற்போது 32 வயதாகின்றது. அதேபோன்று 27 வயதுடைய வேகப்பந்துவீச்சாளராகக் களமிறங்கிய மொஹமட் ஆசிப்புக்கு தற்போது 34 வயதாகின்றது. எனினும் 18 வயது வீரராக களமிறங்கிய மொஹமட் ஆமிருக்கு மாத்திரம் அதிர்ஷ்டவசமாக தற்போது பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் மற்றைய இரு வீரர்களும் போட்டித் தடைக்குப் பிறகு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இதுவரை தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை. இதன்படி இப்பட்டியலில் இவ்வருடம் இணைந்துகொண்ட 28 வயதான சர்ஜீல் கானுக்கும், 31 வயதான காலித் லத்தீபுக்கும் 5 வருடப் போட்டித்தடைக்குப் பிறகு அதாவது எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நிறைவடையும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியுமா என்பது பகல் கனவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, ஒருபுறத்தில் திறமையான வீரர்களை சூதாட்ட தரகர்களிடம் பாதுகாக்கத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை குற்றம் சுமத்துவதா அல்லது பணத்துக்காக தமது வாழ்க்கையையே வீணாக்கிக் கொள்கின்ற வீரர்களை குறை கூறுவதா என்பதை கணிக்க முடியாமல் உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் தற்போதுள்ள அனுபவமிக்க வீரராகவும், மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒழுங்கீனமாக நடந்துகொள்கின்ற வீரராகவும் கருதப்படுகின்ற உமர் அக்மலுக்கு எதிராக தொடர்ந்து போட்டித்தடை விதிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை மேற்கொள்கின்ற முடிவுகள் தொடர்பில் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளித்தோற்றத்தில் சாதாரண வீரராக இருக்கின்ற அக்மலுக்கு, போட்டிகளின் போது ஏற்படுகின்ற ஆவேசம் தவிர்க்க முடியாத விடயமாக மாறிவிட்டது. இதற்கான தீர்வை உமர் அக்மல் சர்வதேசப் போட்டிகளில் அறிமுமாகிய காலத்தில், அறிவுரைகளை வழங்கி அவரை திருத்துவதற்கு தவறிய பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை இந்த இடத்தில் குற்றம் சுமத்துவதில் தவறில்லை.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளின்போது மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியும், மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணியில் இணைத்துக்கொள்ளப்படாத உமர் அக்மல், சுமார் 2 வருடங்களுப்பிறகு அவுஸ்திரேலிய தொடரில் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதனையடுத்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி பரிசோதனையில் அக்மல் தோல்வியடைந்த காரணத்தால், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து நீக்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளின் போது ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்ற உமர் அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் உமர் அக்மல், அந்நாட்டு பயிற்சியாளரை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருப்பது அவருடைய கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். எனினும், வீரரொருவர் ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்பட்டிருந்தால் அவருக்கு எதிராக தண்டணை வழங்குவது தவறில்லை. மாறாக கிரிக்கெட் வீரரொருவக்கு இருக்கின்ற உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக குரல் கொடுப்பது எந்தவகையில் தவறாக இருக்கும் என்பதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனாலும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட உமர் அக்மல் போன்ற வீரர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பது கவலைக்குரிய விடயம் என்பதுடன், அவ்வணிக்கு ஏற்படுகின்ற மிகப் பெரிய இழப்பாகும் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.