மட்டக்களப்பு கூடைப்பந்து அணியை வீழ்த்தி சம்பியனான யாழ் அணி

113

52 ஆவது சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் (இரண்டாம் கட்டத்திற்குரிய) இறுதிப் போட்டிகளும், மூன்றாம் இடத்திற்கான போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பில் நிறைவுக்கு வந்தன.

இதில், ஆண்கள் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணி, மட்டக்களப்பு வீரர்களை 82-75 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றது. 

இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்

52 ஆவது முறையாக நடைபெறும் சிரேஷ்ட அணிகளுக்கான……

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் ஹேபர்ட் கூடைப்பந்து அரங்கில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் முதல் கால்பகுதியினை யாழ்ப்பாண அணி 20-22 என்ற புள்ளிகள் கணக்கில் சொந்தமாக்கி கொண்டது. எனினும், இறுதிப் போட்டியின் அடுத்த இரண்டு கால்பகுதிகளிலும் மட்டக்களப்பு வீரர்கள் அசத்தல் ஆட்டம் காண்பித்து அவற்றை 22-18, 22-16 எனக் கைப்பற்றினர். இதனால், போட்டியின் மூன்றாம் கால்பகுதி நிறைவுக்கு வரும் போது மட்டக்களப்பு அணியினர் 64-54 என ஆட்டத்தில் முன்னிலை பெற்றனர். 

ஆனால், தீடிர் திருப்பமாக போட்டியின் இறுதிக் கால்பகுதியில் மட்டக்களப்பு வீரர்களின் வேகம் குறைந்து, தடுப்பு முயற்சிகளும் குறைவடைந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புள்ளிகளை வேகமாகப் பெறத் தொடங்கிய யாழ்ப்பாண அணி இறுதிக் கால்பகுதியில் 26 புள்ளிகள் எடுத்தது. ஆனால், மட்டக்களப்பு வீரர்கள் இதில் வெறும் 11 புள்ளிகளை மாத்திரமே எடுத்தனர்.  

எனவே, இறுதிக் கால்பகுதியின் ஆதிக்கத்தோடு யாழ்ப்பாண வீரர்கள் போட்டியின் வெற்றியாளர்களாக 82-75 என்ற புள்ளிகள் கணக்கில் மாறினர்.

அதேவேளை, ஹேபர்ட் அரங்கில் நடைபெற்ற சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் பல்கலைக்கழக இணைப்பு பெண்கள் அணியும், கண்டி மாவட்ட அணியும் மோதியிருந்தன. இந்த இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் சிறந்த வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பல்கலைக்கழக இணைப்பு பெண்கள் அணி, கண்டி மாவட்டத்தை 54-44 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றது. 

ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் அசத்திய கண்டி

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்………

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த ஆண், பெண் பிரிவு அணிகள், மியானி கூடைப்பந்து அரங்கில் நடைபெற்ற தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டிகளில் பங்கேற்றன. 

இதில், ஆண்கள் பிரிவு வெற்றியாளர்களாக 59-64 என்ற புள்ளிகள் கணக்கில் கண்டி அணியை வீழ்த்திய அனுராதபுர அணி மாறியது. அதேநேரம், பெண்கள் பிரிவின் மூன்றாம் இடத்திற்கான வெற்றியாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட அணி பொலன்னறுவை அணியை 15-48 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி மாறிக் கொண்டது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<