சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்பின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

77

52 ஆவது சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து (Senior Nationals) சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் கட்டப் (Level II) போட்டிகள் வெள்ளிக்கிழமை (24) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகின. அதன்படி, இந்த தொடரின் முதல் நாளில் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்குமான பிரிவுகளில் மொத்தமாக  5 போட்டிகள் நடைபெற்றன. 

விபுலானந்தன் நினைவுக் கிண்ணம் கொக்குவில் இந்து, மத்திய கல்லூரி வசம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவ முதல்வர் சபையின் ஏற்பாட்டில்…

இதில் மியானி கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் (ஆண்கள் பிரிவு) இலங்கை பல்கலைக்கழக இணைப்பு அணி, அநுராதபுர மாவட்டத்தினைச் சேர்ந்த ஆண்கள் கூடைப்பந்து அணியினை 47-46 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

அதேநேரம், மியானி கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் கண்டி, இரத்தினபுரி ஆகியவற்றின் பெண்கள் பிரிவு கூடைப்பந்து அணிகள் மோதியிருந்தன. இந்த மோதலில், ஆரம்பத்தில் இருந்தே அசத்தலாக செயற்பட்ட மலையக பெண்கள் அணி போட்டியில் 42-21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை சுவைத்தது.

மியானி அரங்கு தவிர முதல் நாளின் எஞ்சிய போட்டிகள் மூன்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் ஹேபர்ட் நினைவு கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்றிருந்தது. 

ஹேபர்ட் அரங்கில் இடம்பெற்ற முதல் போட்டியில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகியவற்றின் ஆண்கள் பிரிவு அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இடம்பெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் சமபலத்தினை வெளிப்படுத்தி புள்ளிகள் சேகரிப்பதில் ஈடுபட்டன. எனினும், இறுதிவரை போராடி அசத்தல் காண்பித்த யாழ்ப்பாண அணி, மட்டக்களப்பு வீரர்களை போட்டியில் 61-64 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. 

>>Photos: 52nd Senior National Level II – Basketball Championship – Day 01<<

ஹேபர்ட் அரங்கில் நடைபெற்ற ஏனைய இரண்டு போட்டிகளில் ஒன்றில் இலங்கை பல்கலைக்கழக இணைப்பு பெண்கள் அணியும், பொலன்னறுவை பெண்கள் அணியும் மோதின. இந்த மோதலில் இலங்கை பல்கலைக்கழக இணைப்பு பெண்கள் அணி 50-02 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியினைப் பதிவு செய்தது. அதேவேளை மற்றைய மோதலில், கண்டி மற்றும் காலி ஆகியவற்றின் ஆண்கள் பிரிவு அணிகள் மோதியிருந்ததோடு இப்போட்டியில் கண்டி வீரர்கள் 77-64 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் பற்றிய ஏனைய விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<