ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

312

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியின் கடைசி பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

விறுவிறுப்புக்கு மத்தியில் இன்று (30) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி ஆறாவது சுவட்டில் ஓடியிருந்ததுடன், 3 நிமிடங்களும் 02.74 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இலங்கை சாதனையை 0.03 செக்கன்களினால் இலங்கை வீரர்கள் தவறவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அஞ்சலோட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

முன்னதாக இலங்கையின் முன்னாள் மத்திய தூர ஜாம்பவான்களான சுகத் திலகரத்ன, ரொஹான் பிரதீப் குமார உள்ளிட்ட வீரர்களினால் 2000ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டத்தை 3 நிமிடங்கள் 02.71 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டப்பட்டதே இலங்கை சாதனையாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18ஆவது ஆசிய விளையாட்டு விழா நிறைவடைய இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், போட்டிகளின் 12ஆவது நாளான இன்றும் மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவின் கடைசி மெய்வல்லுனர் போட்டியான ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டி இலங்கை நேரப்படி 7.10 மணியளவில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியின் எட்டாவது சுவட்டில் இடம்பெற்றிருந்த இலங்கை அணியில் அருண தர்ஷன, அஜித் பிரேமகுமார, பசிந்து கொடிக்கார, காலிங்க குமாரகே ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இதன் ஆறாவது சுவட்டில் ஓடிய கட்டார் அணியின் அப்துர் ரஹ்மான் சம்பா தகுதிச் சுற்றைப் போல முதல் வீரராக போட்டியை நிறைவு செய்தார்.

இலங்கை சார்பாக போட்டியைத் தொடங்கிய இளம் வீரர் அருண தர்ஷன அபார தொடக்கத்தை அளித்தார். அவர், முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து கையில் இருக்கும் கோலை அஜித் பிரேமகுமாரவிடம் ஒப்படைத்தார். எனினும், இந்தத் தொடக்கத்தை அஜித் பயன்படுத்தத் தவறிவிட்டார். இதை சாதகமாகப் பயன்படுத்திய இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டு வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

இதனையடுத்து அஜித் பிரேமகுமார, தனது கையில் இருக்கும் கோலை மூன்றாவதாக ஓடும் பசிந்து கொடிக்காரவிடம் ஒப்படைத்தார். எனினும், இந்திய, ஜப்பான் நாட்டு வீரர்கள் தமது முன்னிலையுடன் ஓடியதால் பசிந்துவுக்கு நான்காவது வீரராக போட்டியை நிறைவு செய்ய நேரிட்டது.

இதன்படி, போட்டியின் இறுதி வீரராக கோலைப் பெற்றுக்கொண்டு ஓடிய காலிங்க குமாரககே மூன்றாவது வீரராக போட்டியை நிறைவுசெய்ய கடைசி 100 மீற்றரில் கடுமையாக முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் 3 நிமிடங்களும், 02.74 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இலங்கை அணி நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆசிய விளையாட்டு விழாவில் தொடர்ச்சியாக பதக்க வாய்ப்பை இழக்கும் இலங்கை

எனவே சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு 4×400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை வீரர்கள் சிறந்த காலத்தைப் பதிவுசெய்தாலும், இந்தியா, ஜப்பான் வீரர்களுக்கு போட்டியின் இறுதிவரை பலத்த போட்டியைக் கொடுத்து நான்காவது இடத்துடன் ஆறுதல் வெற்றியொன்றை இலங்கை வீரர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதேவேளை, வெண்கலப் பதக்கத்தை வெல்வதற்காக கடுமையாக முயற்சித்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அஞ்சலோட்ட அணியின் தலைவர் காலிங்க குமாரகே கருத்து வெளியிடுகையில்,

“இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாம் இறுதிப் போட்டியில் களமிறங்கி சிறப்பாக ஓடினோம். அதிலும், இலங்கை சாதனையை அண்மித்த காலப்பெறுமதியைப் பெற்றுக்கொண்டு போட்டியை நிறைவு செய்தாலும் பதக்கமொன்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது கவலையளிக்கிறது. எம்முடன் போட்டியிட்ட ஏனைய நாட்டு வீரர்களை எடுத்துக்கொண்டால் ஒலிம்பிக், டயமண்ட லீக் ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்டவர்கள். அதேபோல அந்த வீரர்கள் இவ்வாறான போட்டிகளுக்காக அதிக காலம் எடுத்து பயிற்சிகளைப் பெறுவார்கள். ஆனால் நாங்கள் போட்டிகள் ஆரம்பமாக ஒரு வாரத்துக்கு முன் இருந்துதான் பயிற்சிகளில் ஈடுபட்டோம். இதுவும் எமது தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே எதிர்வரும் காலங்களில் இடம்பெறுகின்ற போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு எமக்கு உரிய பயிற்சிகளையும், சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தால் நிச்சயம் இலங்கைக்கு பதக்கங்களை பெற்றுக்கொடுப்போம்” என தெரிவித்தார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை கட்டார் அணி புதிய ஆசிய சாதனையுடன் பெற்றுக்கொண்டது. குறித்த போட்டியை 3 நிமிடங்களும் 00.56 செக்கன்களில் கட்டார் வீரர்கள் நிறைவு செய்திருந்தனர். இதேநேரம் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.

இது இவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டில் நிச்சயம் ஓரிரு பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில், ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் நட்சத்திர மத்திய தூர ஓட்ட வீரர் காலிங்க குமாரகே எட்டாவது இடத்தையும், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் ஜானக பிரசாத் விமலசிறி, ஏழாவது இத்தையும், பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய நிலானி ரத்னாயக்க, ஆறாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் திறன்களை கையாளும் பாகிஸ்தான் பேஸ்போல் அணி

ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் மிகப் பெரிய பதக்க எதிர்பார்ப்புகளாக அமைந்த இந்துனில் ஹேரத் ஆண்களுக்கான 800 மீற்றரில் 8ஆவது இடத்தையும், கயந்திகா அபேரத்ன பெண்களுக்கான 800 மீற்றரில் 6ஆவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். அத்துடன், ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்ட அணியும் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றரில் கலந்துகொண்ட இளம் வீரர் அருண தர்ஷன, பெண்களுக்கான 800 மீற்றரில் நிலானி ரத்னாயக்க மற்றும் பெண்களுக்கான 200 மீற்றரில் ருமேஷிகா ரத்னாயக்க ஆகியோர் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இம்முறை ஆசிய விளையாட்டில் தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்றுவந்த மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 12 வீரர்களும் எந்தவொரு பதக்கத்தினையும் பெற்றுக்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளனர்.

சீனாவுக்கு முதலிடம்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவுக்கு வந்தன. இதில் இரண்டு ஆசிய சாதனைகளுடன், 11 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இதேநேரம், மெய்வல்லுனர் போட்டிகளுக்கான பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. அந்த அணி 12 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 33 பதக்கங்களை வென்றுகொண்டது. 12 தங்கப் பதக்கங்களை வென்ற பஹ்ரெய்ன இரண்டாவது இடத்தையும், 7 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<