தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் அனித்தா, ஆஷிக்குக்கு தங்கம்; சண்முகேஸ்வரனுக்கு இரண்டாமிடம்

149

தேசிய விளையாட்டு பெரு விழா மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளான இன்று (25) பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் மற்றும் ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ZTM ஆஷிக் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வெற்றிகொள்ள, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகத்தின் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 45 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (24) மாலை பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது.  

இந்த நிலையில், போட்டிகளின் முதல் நாளான இன்று (25) காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அனித்தா ஜெகதீஸ்வரன் முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணம் பெற்றுக்கொண்ட 2ஆவது தங்கப் பதக்கமும் இதுவாகும். 

உபாதை காரணமாக அண்மைக்காலமாக பெரும்பாலான போட்டிகளில் பங்குபற்றுவதை தவிர்த்து வந்த அவர், சுமார் ஒரு வருடகால இடைவெளிக்குப் பிறகு இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் களமிறங்கி இந்தப் பதக்கத்தை வென்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3.30 மீற்றர் உயரத்தைத் தாவிய அனித்தா, தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தனது 3ஆவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். முன்னதாக 2015, 2016 மற்றும் 2017ஆம் வருடங்களில் அவர் தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற அனித்தா, அதே வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்துக்கு தேசிய மட்டத்தில் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற நட்சத்திரமாக கோலூன்றிப் பாய்தலில் வருடந்தோறும் சாதனைகளை படைத்து வருகின்ற அனித்தா ஜெகதீஸ்வரன், காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பெரும்பாலான தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றவில்லை.

எனினும், இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் தடவையாக களமிறங்கிய அவர், 3.33 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இது இவ்வாறிருக்க, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான உதேனி சில்வா (3.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், சச்சினி கௌஷல்யா பெரேரா (3.00 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இலங்கை மெய்வல்லுனர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இலங்கை கிரிக்கெட்

இம்முறை நடைபெறவுள்ள தேசிய….

தட்டெறிதலில் ஆஷிக் அபாரம்

ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரான ZTM ஆஷிக் தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டியில் அவர் 43.59 மீற்றர் தூரத்திற்கு தமது திறமையை வெளிப்படுத்தினார்.

முன்னதாக 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாக்களில் ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கங்களை வென்று வந்த ஆஷிக்குக்கு கடந்த வருடம் வெள்ளிப் பதக்கத்தினையே வெற்றிகொள்ள முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியிருந்த அவர், 43.22 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இதனால் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தெரிவாகும் வாய்ப்பையும் தவறவிட்டார். 

இது இவ்வாறிருக்க, இம்முறை தேசிய விளையாட்டு விழா தட்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த எம்.எஸ் நிரோஷன (43.53 மீற்றர்) பெற்றுக்கொண்டதுடன், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த டி.பி ரத்னாயக்க (41.58 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

சண்முகேஸ்வரனுக்கு இரண்டாமிடம்

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் அண்மைக்காலமாக பதக்கங்களை வென்று வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், இம்முறை  தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். 

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டி இன்று காலை நடைபெறவிருந்தாலும், சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு பெரும்பாலான போட்டிகளை மாலை வேளையில் நடாத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதன்படி, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் மற்றும் பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகள் என்பன கடும் குளிருக்கு மத்தியில் இன்று மாலை மின்னொளியின் கீழ் பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட சண்முகேஸ்வரன், பலத்த போட்டியைக் கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் போட்டித் தூரத்தை நிறைவுசெய்ய 31 நிமிடங்களும் 25.59 செக்கன்களை எடுத்துக் கொண்டார். 

கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் முதல்தடவையாகக் களமிறங்கி தங்கப் பதக்கத்தினை வென்ற சண்முகேஸ்வரனுக்கு இம்முறை அதை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது. 

இதேநேரம், குறித்த போட்டியில் சண்முகேஸ்வரனுக்கு எப்போதும் பலத்த போட்டியைக் கொடுத்து வருகின்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார, 31 நிமிடங்களும் 25.56 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, ஊவா மகாணத்தைச் சேர்ந்த உபுல் குமார (31நிமி. 25.66செக்.) வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தார். 

தேசிய விளையாட்டு பெரு விழாவில் 4 சாதனைகளுடன் தங்கம் வென்றார் ஆர்ஷிகா

தேசிய விளையாட்டு பெரு விழா……

அமிலவை வீழ்த்திய கயான்

இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் ஊவா மாகாணத்திற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை கயான் சம்பத் பெற்றுக்கொடுத்தார். 

ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 7.34 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார். இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் ஊவா மாகாணம் பெற்றுக்கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். 

முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தேசிய சம்பியனான வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அமில ஜயசிறி 7.32 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வெற்றிகொள்ள, அதே மாகாணத்தைச் சேர்ந்த எம்.கே கருணாசேகர (7.29 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார். 

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான நீளம் பாய்தலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த அஞ்சானி புலவங்ஸ 5.96 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். 

இதில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான லக்ஷிகா சுகந்தி (5.76 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், சதீபா ஹெண்டர்சன் (5.67 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர். 

ரத்னசேன சகோதரர்கள் அபாரம்

ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த அசங்க ரத்னசேன தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 54.05 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். 

2016ஆம் ஆண்டு முதல் தேசிய விளையாட்டு விழாவில் இவர் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தினை வென்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இதேநேரம், போட்டியை 54.38 செக்கன்களில் நிறைவு செய்த அசங்கவின் இளைய சகோதரரான அசித ரத்னசேன வெள்ளிப் பதக்கத்தினை வெற்றி கொண்டார். 

35 தங்கப் பதக்கங்களை குறிவைத்து நேபாளம் செல்லும் இலங்கை அணி

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால்….

அமாஷாவுக்கு முதல் தங்கம்

கனிஷ்ட மெய்வல்லுனர் அரங்கில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அமாஷா டி சில்வா, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 25.00 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். 

இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சுபேஷ் விக்ரமசிங்க தங்கம் வென்றார். போட்டித் தூரத்தை அவர் 21.89 செக்கன்களில் நிறைவு செய்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<