கோலூன்றி பாய்தலில் யாழ்ப்பாணம் அனிதா ஜெகதீஸ்வரம் புதிய சாதனை

2632
Anitha Jagatheswaram

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் 42வது தேசிய விளையாட்டு விழாவில் முதலாம் நாள் போட்டிகளில் யாழ் மண்ணை சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரம் புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அனிதா, வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பங்கேற்றிருந்தார். இன்று இடம்பெற்ற இவருக்கான போட்டியில் அனிதா, 3.41 மீட்டர் உயரம் பாய்ந்து கோலூன்றி பாய்தலில் புதிய தேசிய சாதனையை நிகழ்தியுள்ளார்.

அனிதா இவ்வாறு சாதனையை பதிவு செய்வது இது முதல் தடவையல்ல. ஏற்கனவே இவ்வருடம் இடம்பெற்ற சார் ஜோன் தர்பட் விளையாட்டு போட்டி நிகழ்வின்போது இவர் 3.35 மீட்டர் உயரம் பாய்ந்து தேசிய சாதனையை ஏற்படுத்தியிருந்தார். எனினும் பின்னர் அந்த சாதனை ஹாஷிதா தில்ருக்க்ஷி (3.40 மீட்டர்) மூலம் முறியடிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று இன்று இடம்பெற்ற பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் தாரிக பெர்னாண்டோவும் புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தினார். பானந்துரை குட் செப்பர்ட் கல்லூரியின் பழைய மாணவியான இவர், 15.25 மீட்டர் தூரத்திற்கு குண்டை எறிந்து இந்த தேசிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கடந்த 8 வருடங்களின் பின்னர் இந்த சாதனை முறியடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 14.48 மீட்டர் தூரம் குண்டை எறிந்து M.N.D.முதுனாயக இந்த சாதனையை ஏற்படுத்தியிருந்தார். மேலும், 15 மீட்டரை விட அதிக தூரம் குண்டை எறிந்த இலங்கையின் முதல் பெண்ணாகவும் தாரிக பெர்னாண்டோ உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் லியொனல் சமரஜீவ முதல் இடத்தினைப் பெற்று தங்கம் வென்றார். குறித்த தூரத்தை அவர் 31:44:5 நிமிடங்களில் ஓடி முடித்தார். இது இவர் பெறும் ஆறாவது தங்கமாக உள்ளது.

அதே போன்று பெண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் குறித்த தூரத்தை 17:07:6 நிமிடங்களில் ஓடி முடித்து நிலானி ரத்னாயக்க தங்கம் வென்றார்.

42வது தேசிய விளையாட்டு விழா தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. எனவே இது குறித்த அனைத்து தகவல்களையும் தொடர்ந்து thepapare.com இல் எதிர்பாருங்கள்.