FA கிண்ணத்தின் தமது முதல் போட்டியில் வெற்றியை சுவைத்த ரினௌன்

1462
Golden Rise vs Renown SC

அளுத்கம ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த பருவகாலத்திற்கான FA கிண்ணத்தின் 32 அணிகளை கொண்ட சுற்றுப் போட்டியில், ரினௌன் விளையாட்டுக் கழகம், கோல்டன் ரைஸ் விளையாட்டுக் கழகத்தை 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.  

இத்தொடரின் 64 அணிகளைக் கொண்ட சுற்றுப்போட்டியில் ஹைலண்டர்ஸ் அணி 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் கோல்டன் ரைஸ் அணியை வெற்றி கொண்டது. எனினும், போட்டி விதிமுறைகளுக்கு புறம்பாக இரண்டுக்கு மேற்பட்ட இராணுவ வீரர்களுடன் விளையாடிய காரணத்தினால், குறித்த வெற்றி கோல்டன் ரைஸ் விளையாட்டு கழகத்துக்கு மாற்றியமைக்கப்பட்டது.

விறுவிறுப்பான பெனால்டி உதைகளின் மூலம் வெற்றியை சுவீகரித்த விமானப்படை

அதேநேரம், முல்லைதீவு கால்பந்து லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழக அணியுடனான போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகத்துக்கு வோக்ஓவர் வழங்கப்பட்டதால் 32 அணிகளைக் கொண்ட சுற்றுப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

சமநிலை இல்லாத மோசமான நிலையிலிருந்த மைதானத்தின் தன்மை ரினௌன் விளையாட்டுக் கழகத்தின் அதிரடி ஆட்டத்தினை ஆரம்ப நிமிடங்களில் குழப்பியிருந்தது.

எவ்வாரிருப்பினும், மோசமான தரத்திலிருந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ரினௌன் விளையாட்டுக் கழகம் புதிய நட்சத்திர வீரர்களான முஹம்மத் முஜீப் மற்றும் முஹம்மத் அசாத் ஆகியோரை மத்திய களத்திலும், அனுபவ வீரர்களான முஹம்மத் பசால், முஹம்மத் ரிப்னாஸ் ஆகியோரை முன்களத்திலும் களமிறக்கியது. இடைவேளைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பதாக ரிப்னாஸ், அவிஷ்க பெர்னாண்டோவை லாவகமாகத் தாண்டிச் சென்று முதல் கோலை செலுத்தினார்.

அதனையடுத்து இடைவேளைக்கு சில நிமிடங்களே எஞ்சிய நிலையில், முஹம்மத் இஜாபின் மூலம் கிடைக்கப்பெற்ற இலவச உதையை பர்ஹான் மரிக்கார் கோலாக மாற்றி ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார்.

முதல் பாதி: கோல்டன் ரைஸ் விளையாட்டுக் கழகம் 1 – 1 ரினௌன் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து சில வினாடிகளிலேயே ரினௌன் இரண்டாவது கோலைப் பெற்றுக்கொண்டது. ரிப்னாஸ் கோல் கம்பத்துக்கு குறுக்காக உள்ளனுப்பிய பந்தை அசாத் இலகுவான ஹெடர் மூலமாக கோலாக மாற்றினார்.

போட்டியின் 77ஆவது நிமிடம், உதவி நடுவரினால் ஓப் சைட் என சைகை செய்திருந்த போதிலும், பிரதான நடுவர் தயான் சேனாநாயக்கவினால் ஒப் சைடுக்கான சைகை காண்பிக்கப்படாமல் தொடர்ந்து விளையாடுமாறு பணிக்கப்பட்டது. ஒப் சைட் என்பதால் கோல்டன் ரைஸ் தடுப்பு வீரர்கள் விளையாடுவதை நிறுத்தினர். எனினும்,  சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட முஜீப் பாசாலுக்கு பந்தினை உள்ளனுப்ப, அதை அவர் கோலாக மாற்றினார்.

இதற்கு எதிராக கோல்டன் ரைஸ் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும்,  குறித்த கோல் ரினௌன் கழகத்துக்கு வழங்கப்பட்டது. அத்துடன், அவர்கள் செய்த தவறை உணர்ந்து கொண்டார்கள். எனினும், கோல்டன் ரைஸ் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு போட்டியை நடத்த இடைஞ்சலாக இருந்தமையினால் ஆட்டம் சற்று நேரம் நிறுத்தி வைக்கபட்டது.  

காலிறுதிக்கு முன்னைய சுற்றில் சௌண்டர்ஸ், ராணுவப்படை மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகள்

அதன் பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பமானது. மீண்டும் சிறப்பாக விளையாடிய  ரினௌன் கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற இலவச உதையை ரிப்னாஸ் உள்ளனுப்ப, பசுல் ரஹுமான்  ஹெடர் முலமாக அதனை கோலாக்கினார்.

முழு நேரம்: கோல்டன் ரைஸ் விளையாட்டுக் கழகம் 1 – 4 ரினௌன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com மின் ஆட்ட நாயகன்  – முஹமத் அசாத் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த கோல்டன் ரைஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் முஹம்மத் இமிதியாஸ், ரினௌன் கழகம் மிகவும் சிறந்த அணி. நாங்கள் மிகவும் சிறிய அணி. மோதலில் அவர்கள் கோல் அடிப்பதை தடுத்துக் கொள்ளவே வேண்டியிருந்தது. அதை நாம் முதல் பாதி நேரத்தில் செய்தோம். முதல் பாதி நேரத்தில் ஒரே ஒரு முன்கள வீரருடன் மாத்திரமே விளையாடினோம். இரண்டாம் பாதி நேரத்தில் மேலுமொரு வீரரை முன்களத்தில் இணைத்தோம். எதோ ஒரு வகையில் ஒரு  கோலை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.  எமது ஆதரவாளர்கள் எதிர்பார்த்ததை விட எங்களுடைய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர்.

ஒப் சைட் கோல் குறித்து கருத்து தெரிவித்த அவர், ”அது எங்களுடைய வீரர்களின் பிழை. நாங்கள் நடுவரின் சமிக்ஞைக்கு விளையாடியிருக்க  வேண்டும். இதுவே அடிப்படை. அதில் தவறிழைத்து விட்டோம் என்றார்.

போட்டி குறித்து ரினௌன் கழக பயிற்சியாளர் முஹமத் அமானுல்ல கருத்து தெரிவித்தபோது, ”கால்பந்து பற்றி தெரியாதவர்கள் தான் இந்த மாதிரியான மைதானங்களில் விளையாடச் சொல்வார்கள். இது மாதிரியான மைதானங்களில் வீரர்கள் விளையாடி காயமடைவதால், அவர்களும் கழகமும் துன்பப்படுகின்றது. சிலநேரம் அவர்களுடைய கால்பந்து வாழ்க்கையும் முடிவடையக் கூடும்.  

தமது அணியின் இளம் வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர்,

இது அசாத்தின் முதல் போட்டியாகும். மைதானத்தில் நன்றாக விளையாடினார். அதேநேரம், பின்கள மத்தியில் விளையாடிய இஜாசும் நன்றாக விளையாடினார். எனினும், சரியான ஸ்ட்ரைக்கர் ஒருவர் இல்லாத குறையே காணப்படுகின்றது. ஆனால், அவர்கள் விளையாடும் விதத்தை பார்க்கும் பொழுது, எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.

கோல் பெற்றவர்கள்

கோல்டன் ரைஸ் விளையாட்டுக் கழகம் பர்ஹான் மரிக்கார் 45+2

ரினௌன் விளையாட்டுக் கழகம் முஹமட் ரிப்னாஸ் 30’, முஹம்மத் அசாத் 46’, முஹமட் பசால்  77’, பசுல் ரஹுமான்  90+6’