மகாஜனாவிடமிருந்து கிண்ணத்தை மீட்குமா ஸ்கந்தவரோதயா?

167

வடமாகாணத்தின் கிரிக்கெட் விளையாடும் முக்கிய கல்லூரிகளான சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி அணிகளுக்கு இடையிலான “வீரர்களின் போர்” (Battle of the Heroes) என வர்ணிக்கப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமரானது 20 ஆவது முறையாக, இம்மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமரில் இதுவரையில் 19 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், மகாஜனா கல்லூரி 5 போட்டிகளிலும், ஸ்கந்தவரோதயா கல்லூரி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

Photos: Skandavarodaya College Cricket Team Preview 2019/20

ThePapare.com | Jeyendra Logendran | 25/02/2020 Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended copyright infringement.

கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற மோதல் சமநிலை முடிவையே கொடுத்துள்ளது  எனினும், இறுதியாக கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மகாஜனா கல்லூரி அணியினர் வெற்றியைத் தமதாக்கி இறுதியாக வெற்றி பெற்றவர்கள் என்ற பதிவை தம்மகத்தே கொண்டுள்ளனர். அதேவேளை, ஸ்கந்தவரோதயா கல்லூரி 2014 ஆம் ஆண்டில் இறுதி வெற்றியை பதிவு செய்துள்ளது.

சகலதுறை வீரரான கிருஷன் தலைமையில் இம்முறை பெரும் சமரில் பங்கெடுக்கும் மகாஜனா அணியினர் இந்த பருவகாலத்தில் 7 போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். யாழ்ப்பாண கல்லூரிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருப்பதுடன், மத்திய கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி உடட்பட ஏனைய 5 போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்துள்ளனர். குறிப்பாக, ஹாட்லி கல்லூரி, யூனியன் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளுக்கு எதிரான போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் வெற்றியையும் பெற்றுள்ளனர்.

மகாஜனா கல்லூரியின் எதிர்பார்ப்பிற்குரிய வீரராக சகலதுறை ஆட்டக்காரரான வரலக்ஷன் விளங்குகின்றார். துடுப்பாட்டத்தினை பொறுத்தவரையில் அணியின் தலைவர் கிருஷன் மற்றும் மதீசன் வலுச்சேர்க்கவுள்ளனர். பந்து வீச்சில் வேகப்பந்துவீச்சாளர் சதுர்ஜன் மற்றும் சகலதுறை வீரர்கள் கிருஷ்ணன் மற்றும் வரலக்சனின் கைகளிலேயே அணி தங்கியுள்ளது. 

Photos : Mahajana College U19 Cricket Team Preview 2019/20

ThePapare.com | Jay Logendra | 26/02/2020 Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended copyright infringement.

இரண்டு நாட்களும் ஸ்கந்தவரோதயா அணிக்கு பலத்த சவாலை கொடுப்பது மாத்திரமின்றி, சொந்த மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் தமக்கு சாதகமான முடிவொன்றைப் பெற்று ஐந்தாவது ஆண்டாக கிண்ணத்தினை தக்கவைப்பது மகாஜனன்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

சகலதுறை வீரரான பிரசன் தலைமையில் களமிறங்கும் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் ஒப்பீட்டளவில் பலமான அணியாக பிரிவு மூன்றின் தரம் ஒன்றிற்கான போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இந்த பருவகாலத்தில் 8 போட்டிகளில் பங்கெடுத்திருக்கும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஒரு இன்னிங்ஸ் வெற்றி உட்பட இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சென். ஜோன்ஸ் மற்றும் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு எதிரான போட்டிகள் உட்பட 4 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளதுடன், இரு போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளனர். 

அணியின் பலமாக சகலதுறை வீரர்களே காணப்படுகின்றனர். துடுப்பாட்டத்தினை பொறுத்தவரையில் அணியின் தலைவர் பிரசன், உபதலைவர் டான்சன், டக்சன், சரதன் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். பிரசன் மற்றும் டான்சன் முறையே யூனியன் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு எதிராக சதங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பந்துவீச்சினை அவதானிக்கையில் வேகப் பந்துவீச்சாளர்களாக கடந்த வருடம் பெரும் சமரில் சோபித்த டான்சன், கௌரி ஷங்கர் ஜோடி உள்வாங்கப்பட்டுள்ளது. அதேவேளை அணியின் சுழல் பந்துவீச்சு துறையினை பிரசன், தனுஷ்ராஜ் ஜோடி பலப்படுத்துகின்றது. 

இம்முறையும் பலமான அணியாகவே களமிறங்கும் ஸ்கந்தவரோதயா வீரர்களின் எதிர்பார்ப்பு கிண்ணத்தினை மகாஜனாவிடமிருந்து மீட்பதாகவே இருக்கின்றது. 

மகாஜனாவின் சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளும் ஸ்கந்தாவின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு மகாஜனாவின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பட்சத்தில் கிண்ணத்தினை மீட்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மறுபக்கம் ஸ்கந்தாவின்  பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டு ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் ஒரு வருடத்திற்கு மகாஜனங்கள் கிண்ணத்தினை தக்க வைத்துக்கொள்ளலாம். 

மகாஜனா கல்லூரி மைதானத்தில் போட்டி இடம் பெறுவதனால் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.  

போட்டியின் புகைப்படங்கள் மற்றும் போட்டி விபரங்களை thepapare.com இணையம் ஊடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க