2018 கால்பந்து உலகம் – ஒரு கண்ணோட்டம்

252

உயர்ந்துவரும் பந்தை தடுக்கும் முயற்சியாகவே மரியோ மண்ட்சுகிக் உயரப் பாய்ந்து தலையால் முட்டினார் ஆனால் அதனையும் தாண்டி பந்து வலைக்குள் சென்றது. பின்னர் 69 ஆவது நிமிடத்தில் எதிரணி கோல்காப்பாளரை முறியடித்த மண்ட்சுக்கி கோல் ஒன்றை போட்டபோதும் குரோஷிய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல அது போதுமாக இருக்கவில்லை.

மொஸ்கோ, லுஸ்னிக்கி அரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி ஏற்கனவே நான்கு கோல்களை புகுத்தி உறுதியான முன்னிலையில் இருந்தபோதே மண்ட்சுகிக் தனது அணிக்கு இரண்டாவது கோலை போட்டார். என்றாலும் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

2018 இல் விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்

2018 ஆம் ஆண்டு கால்பந்து உலகைப் பொறுத்தவரை உலகக் கிண்ணத்தின் ஆண்டாகவே இருந்தது. ஜுன் மாதம் 14 தொடக்கம் ஜுலை மாதம் 15 வரை 32 அணிகளுடன் ரஷ்யாவில் ஒரு மாதம் நடைபெற்ற பிஃபா உலகக் கிண்ணத்தை வெல்ல இளம் பிரான்ஸ் அணிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தது.

கைலியன் ம்பாப்பே, பெஞ்சமின் பவார்ட், அன்டொயின் கிறிஸ்மன் என்று புதிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரான்ஸ் அணி தோல்வியுறாமல் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிது.


நீல சட்டையின் மகிமை

உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் மாத்திரமல்ல 2018 ஆம் ஆண்டு உண்மையில் நீலச் சட்டையின் ஆண்டாகவே மாறியிருந்தது. நீல நிற மன்செஸ்டர் சிட்டி இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் பல சாதனைகளோடு சம்பியனானது. அதவாது பிரீமியர் லீக் பருவம் ஒன்றில் 100 புள்ளிகளை பெற்ற முதல் அணியாக அது பதிவானது முக்கிய சாதனையாகும்.

பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) ஆகிய நீல ஜெர்சி அணிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. முறையே ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் கழகங்கள் தத்தமது உள்நாட்டு கிண்ணத்தை கைப்பற்றின. லியோனல் மெஸ்ஸி இருக்கும் பார்சிலோனா போப் டெல் ரே கிண்ணத்தை வெல்லும்போது நெய்மரின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் பிரான்சின் கூப் டெ லா லீக் மற்றும் கூப் டி பிரான்ஸ் கிண்ணங்களை வென்றது.

நீலத்தை தவிர்த்து ஜுவாண்டஸ், பெயார்ன் மியுனிச் மற்றும் செல்டிக் அணிகள் மீண்டும் ஒருமுறை தமது உள்நாட்டு தொடரில் சம்பியன் கிண்ணத்தை வெல்ல தவறவில்லை.    


ரியல் மெட்ரிட் எழுச்சியும் வீழ்ச்சியும்

2018 இல் ரியல் மெட்ரிட் கழகத்தைப் போன்று உச்சத்தை தொட்டது மற்றும் அப்படியே பாதாளத்தில் வீழ்ந்த அணி வேறு எதுவும் இல்லை. கடந்த மே 26 ஆம் திகதி உக்ரைனில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் கழகமான ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் லிவர்பூல் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

இலங்கையில் ஐ.சி.சி இன் ஊழல் அதிகாரியொருவரை நியமிக்க இணக்கம்

உலகக் கிண்ணத்திற்கு அடுத்து உலகமே உற்றுப்பார்க்கும் இந்த கிண்ணத்தை ரியல் மெட்ரிட் வெல்வது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இருந்தது. இப்படி உச்சத்தில் இருந்த அந்த அணிக்கு அடுத்து வந்த ஐந்தாவது நாளிலேயே அதன் பயிற்றுவிப்பாளர் சினடின் சிடேன் அதிர்ச்சி கொடுத்தார்.

மூன்று முறை சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற ஒரே பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையை பெற்ற அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து வந்த காலங்கள் ரியல் மெட்ரிட் நிலைத்திருக்க தடுமாற்றம் கண்ட காலமாகவே இருந்தது.

மற்றொரு அதிர்ச்சியாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மெட்ரிட்டை விட்டு வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டார். கடந்த ஜுலை மாதம் அவர் ஜுவான்டஸ் அணியுடன் இணைந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ரியல் மெட்ரிட்டுக்கு விளையாடிய ரொனால்டோ இப்படி திடீரென்று வெளியேறியதை அந்த அணி சுதாகரிக்க சற்று தடுமாறியது.

எவ்வாறாயினும் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற்ற கழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ணத்தில் அபுதாபியின் அல் அயின் அணியை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்றாவது முறை சம்பியனானது ரியல் மெட்ரிட்டின் புதிய எழுச்சியின் ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம்.


லூகாவால் முடிந்த மெஸ்ஸி, ரொனால்டோ சகாப்தம்

ரியல் மெட்ரிட் கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அதன் முன்களத்தில் ரொனால்டோ இருப்பது மாத்திரம் காரணமல்ல, அதன் மத்தியகளம் எப்போதும் வலுவாக இருந்தது. அந்த மர்மத்திற்கு காரணம் லூகா மொட்ரிக். ஆனால் கால்பந்து உலகம் கடந்த உலகக் கிண்ணம் வரை அவரை சரியாக பொருட்படுத்தவே இல்லை.

உலகக் கிண்ணத்தில் அவரது குரோஷிய அணி காலிறுதிக்குக் கூட வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி ஒன்றல்ல. ஆனால் முதல் முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறியது. குரோஷிய அணியின் போட்டிகள் அனைத்திலும் மொட்ரிக் பார்க்கும் இடமெல்லாம் இருந்தார். கிட்டத்த அவர் தனியே ஐரோப்பாவின் ஒரு மூலையில் இருக்கும் குரோஷியாவை உலகெல்லாம் பார்க்கச் செய்தார்.

இதனால் உலகக் கிண்ணத்தில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை வென்ற 33 வயதுடைய மொட்ரிக் அத்தோடு நிற்கவில்லை. 2018 ஆம் ஆண்டின் பிஃபா சிறந்த வீரர் விருதை வென்ற அவர் பல்லோன் டியோர் (Ballon d’Or) விருதையும் கைப்பற்றினார்.

கால்பந்து உலகின் சிறந்த வீரரை அடையாளம் காணும் இந்த விருதுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவருமே ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் 21 ஆம்  நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக கருதப்பட்டு வரும் இந்த இருவரதும் சகாப்தம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கால்பந்து உலகம் நம்ப ஆரம்பித்து விட்டது.


இரண்டு ஆண்டுகளின் பின் இலங்கை

இலங்கை தேசிய கால்பந்து அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளில் பங்கேற்காமல் இருந்ததன் விளைவை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தரவரிசையில் தெளிவாக பார்க்க முந்தது. தனது மிக மோசமான தரநிலையான உலகின் 200 ஆவது இடத்துடன் இந்த ஆண்டை ஆரம்பித்த இலங்கை அணி கடந்த ஒக்டோபரில் மேலும் பின்னடைவை சந்தித்து 201 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதாவது உலகத் தரவரிசையில் இலங்கை அணி 10 அணிகளுக்கு மாத்திரமே முன்னால் நிற்கிறது. அந்த பத்து அணிகளுமே உலகத்திற்கு பெரிதாக அறிமுகம் இல்லாத அணிகள்.

மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ்

என்றாலும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி மும்முரமாக இருந்த வேளையிலே இலங்கை தேசிய அணி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கால்பந்து போட்டியில் களமிறங்கியது. அதாவது கடந்த ஜூலை மாதம் இலங்கை வந்த லித்துவேனிய கால்பந்து அணி இலங்கை அணியுடன் இரண்டு நட்புறவு போட்டிகளில் பங்கேற்றது.

இது ஐரோப்பிய அணி ஒன்றுடன் இலங்கை மோதும் முதல் கால்பந்து போட்டியாக இருந்ததோடு ஆறு ஆண்டுகளின் பின் வெளிநாட்டு அணி ஒன்றுடன் சொந்த மண்ணில் இலங்கையில் விளையாடும் முதல் போட்டியாகவும் அமைந்தது. இதன் முதல் போட்டியை இலங்கை அணியால் கோல் இன்றி சமநிலை செய்ய முடிந்ததோடு இரண்டாவது போட்டியில் 0-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

எனினும் கடந்த ஓகஸ்ட் மாதம் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற நட்புறவு கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கால் இலங்கையினால் வெற்றி பெற முடிந்தது. கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற சாப் கிண்ண போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தை 0-2 என தோல்வி அடைந்த இலங்கை அணி மாலைதீவுகளுடனான ஆட்டத்தை கோலின்றி சமன் செய்தது.

2018 ஆம் ஆண்டி கடைசி போட்டியாக கடந்த ஒக்டோபரில் மலேசிய அணியை சந்தித்த இலங்கை அணி அந்த போட்டியில் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

எப்படி இருந்தபோதும் இலங்கை அணி தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும் சர்வதேச போட்டிகளில் ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.


உள்நாட்டு போட்டிகள் எப்படி?

இலங்கை வரலாற்றின் 56 ஆவது பருவத்திற்கு வழக்கம்போல் 2018 ஆம் ஆண்டும் எப்.ஏ. கிண்ண தொடர் நடைபெற்றது. மொத்தம் 715 அணிகளுடன் ஆரம்பமான இந்த நொக் அவுட் தொடரின் டிசம்பர் முதலாம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை இராணுவப்படை அணி மீண்டும் சம்பியனானது.      

2018 ஆம் ஆண்டு முதல் முறை நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான Thepapare  கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி சம்பியனானது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியின் புனித ஜோசப் கல்லூரி பெனால்டி ஷுட் அவுட் முறையில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியை வீழ்த்தியது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<