2016ஆம் ஆண்டு, கிரிக்கெட் விளையாட்டின் பொற்காலம் என கருதப்படும் அளவிற்கு அவ்வாண்டில் பல முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த வருடத்தில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டதோடு, ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பல முறியடிக்கப்பட்டும் உள்ளன. இன்னும் யாருமே எதிர்பார்த்து இருக்க முடியாத திருப்புமுனையான போட்டிகளும் அவ்வாண்டில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் சிறு தொகுப்பே இந்த கட்டுரை.

அதிவேக டெஸ்ட் அரைச் சதத்துடன் ஓய்வு பெற்ற பிரன்டன் மெக்கலம்

@Getty Image
@Getty Image

நியூசிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான, பிரன்டன் மெக்கலம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்கெதிராக 54 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் அதிவேகமாக டெஸ்ட் சதம் கடந்த வீரர் என்ற சாதனையை  தனது இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவர் நிகழ்த்திக் காட்டியதோடு, டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (106) அடித்த வீரர் என்ற சாதனையினையும் அப்போட்டியின் போது மெக்கலம் நிலைநாட்டி இருந்தார்.

சிறந்த T-20 ஓவரினை வழிநடாத்திய தோனி

(AFP/Getty Images)
(AFP/Getty Images)

கடந்த வருடம்  நடைபெற்று முடிந்த T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 25ஆவது போட்டியான பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில், எஞ்சி இருந்த இறுதி மூன்று பந்துகளில் 2 ஓட்டங்களை மாத்திரமே பங்களாதேஷ் அணி  பெற வேண்டி இருந்தது.

அத்தருணத்தில், அவ்வணியின் ஏனைய வீரர்கள் யாவரும் ஏற்கனவே வெற்றி களிப்பினை ஆரம்பித்து இருந்தனர். அப்போது  பந்து வீசிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு, இந்திய அணியின் தலைவர் டோனி நுணுக்கமான உபாயங்களினை கையாண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இதன்படி செயற்பட்ட பந்து வீச்சாளர் அந்த ஓவரின் 4ஆவது மற்றும் 5ஆவது பந்துகளினை விக்கெட்டுக்களாக மாற்றினார். இதனால் பங்களாதேஷின் பக்கம் சாய்ந்திருந்த போட்டியில், யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியாமல் இன்னும் விறுவிறுப்பானது. அதன் பின்னர்  இறுதி பந்தில்  பங்களாதேஷ் ரன் அவுட் முறையில் தமது விக்கெட்டினை பறிகொடுத்து ஒரு ஓட்டத்தினால் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

எதிர்பாராத திருப்பம் ஒன்றின் மூலம் பங்களாதேஷ் அணியின் இத்தோல்வி காரணமாக அவ்வணியின் இரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்ததோடு, இறுதித் தருணத்தில் தோனியின் குறித்த செயற்பாடு முழு கிரிக்கெட் உலகினை வியக்க வைத்தது.

விளையாட்டில் 2016ஆம் ஆண்டை ஒருமுறை மீட்டிப் பார்ப்போம்

கடந்த 2016ஆம் அண்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் நாட்காட்டியில் குறிப்பிடும் விதத்தில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளையும் வெற்றிகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

மேற்கிந்திய தீவுகளை இமாலய உச்சத்திற்கு கொண்டு சென்ற கார்லோஸ் ப்ராத்வைட்

@Getty Image
@Getty Image

சென்ற மார்ச் மாதத்தில் இடம்பெற்ற  T-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் இறுதி ஓவரில் 19 ஒட்டங்களினை பெறும் விதமாக மேற்கிந்திய தீவுகள் அணியினை இங்கிலாந்து அணி மடக்கி இருந்தது. இதனால் இங்கிலாந்தே கிண்ணத்தை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு முழு உலக கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியிலும் அதிகமாகி இருந்தது.

இத்தருணத்தில் முண்ணனி பந்து வீச்சாளரான பென் ஸ்டோக்கின் இறுதி ஓவரினை எதிர்கொள்ள வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கார்லோஸ் ப்ராத்வைட், அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளினையும் சிக்ஸர்களாக மாற்றி  இரண்டு பந்துகளினை மீதம் வைத்து வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தினை தனது தாயகத்திற்காக கைப்பற்றி உலகையே தன்பக்கம் ஈர்த்தார்.

மேலும், கடந்த ஆண்டில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலக கிண்ணத்தினையும், மகளிர் T-20 உலக கிண்ணத்தினையும் மேற்கிந்திய தீவுகள் அணியே கைப்பற்றி, மூன்று விதமான உலகக் கிண்ணங்களையும் 2016இல் கைப்பற்றிய பெருமையை தன்னகத்தே வைத்துக்கொள்கின்றது.

சதமடிக்க வயது தடையல்ல என்பதை நிரூபித்த மிஸ்பா உல் ஹக்

@Getty Image
@Getty Image

கடந்த வருடத்தின் ஜூலை மாதம் இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டிருந்த மிஸ்பா உல் ஹக், தனது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட சதத்தின் துணையுடன் அப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம், உலகில் இருக்கும் டெஸ்ட் அணித் தலைவர்களில் அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற பெருமையினை மிஸ்பா தனதாக்கிக் கொண்டார். இச்சதத்தினை பெறும்போது அவருக்கு 42 வயதாகும்.

இங்கிலாந்திற்கு எதிராக வரலாற்றில் முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவு செய்த பங்களாதேஷ் அணி

@Getty Image
@Getty Image

2003ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணியுடன், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் பங்களாதேஷ் அணி, அவ்வணியுடன் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியினையே சந்தித்துள்ளது. எனினும் கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் மிர்பூர் நகரில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் வீரர் மெஹதி ஹஸ்ஸனின் அபார பந்து வீச்சின்  துணையுடன், வரலாற்றில் முதல் தடவையாக இங்கிலாந்து அணியினை டெஸ்ட் போட்டியொன்றில் பங்களாதேஷ் வீழ்த்தியிருந்தது.

குசல் மெண்டிஸின் துணையுடன், வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி

@Getty Image
@Getty Image

டெஸ்ட் அணிகளில் உலகில் மிகவும் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா அணியுடன் 26  போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, ஒரு முறை மாத்திரமே  அவ்வணியினை வீழ்த்தியிருக்கின்றது. நிலைமை இப்படியிருக்கும் போது, கடந்த வருட ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற, அவுஸ்திரேலிய அணியுடனான தொடரினை அனுபவம் குறைந்த வீரர்களின் துணையுடன்  இலங்கை அணி  3-0 என கைப்பற்றி, அவுஸ்திரேலிய அணியினை வைட் வொஷ் செய்து வரலாற்று சாதனை ஒன்றினை புரிந்திருந்தது.

இதற்கு, அக்காலத்தில் இலங்கை அணியில் புதிதாக அறிமுகமாகியிருந்த 21 வயதேயான குஷல் மெண்டிஸ் பெரும்பாங்காற்றியதோடு, இலங்கை அணியின் சார்பாக மிகவும் குறைந்த வயதில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சதம் அடித்த வீரர் என்ற பெருமையினையும் இத்தொடரின் மூலம் அவர் தன்னகத்தே ஈர்த்துக்கொண்டார்.  

இலங்கையின் சாதனையை இலங்கைக்கு எதிராகவே தகர்த்த அவுஸ்திரேலியாGlenn Maxwell

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத்தில், கென்ய அணிக்கெதிராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் அபாரமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் சர்வதேச T20 போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையான 260 ஓட்டங்களினை இலங்கை பதிவு செய்திருந்தது.

இந்த சாதனையை முறியடிப்பது ஏனைய அணிகளுக்கு கடந்த வருடங்களில் சிம்மசொப்பனமாக இருந்த போதிலும், அப்போட்டி இடம்பெற்று சுமார் பத்து வருடங்களின் பின்னர், கிளென் மெக்ஸ்வலின் அபாரமான துடுப்பாட்டத்தின் துணையுடன் அவுஸ்திரேலியா அணிகடந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் இலங்கை அணிக்கு எதிராக பல்லேகலயில் நடைபெற்ற முதலாவது சர்வதேச T-20 போட்டியில் 263 ஓட்டங்களை குவித்து குறித்த சாதனையை முறியடித்தது.

இங்கிலாந்தினால் முறியடிக்கப்பட்ட இலங்கை அணியின் மற்றுமொரு சாதனை

@Getty Image
@Getty Image

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கையான 443 ஓட்டங்களினை 2006ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கெதிராக இலங்கை அணி பெற்றிருந்தது. இந்நிலையில், சென்ற வருடத்தின் ஓகஸ்ட் மாத இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒரு நாள் போட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸ் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் உதவியுடன்444 ஓட்டங்களினை பெற்று இங்கிலாந்து குறித்த சாதனையை தன்வசப்படுத்திக் கொண்டது.

இப்போட்டியில் 171 ஓட்டங்களை விளாசியிருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணியின் சார்பாக, ஒரு நாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டம் பெற்ற வீரர் என்ற பதிவினை அப்போட்டி மூலம் பெற்றுக்கொண்டார்.  

அதிகூடிய ஓட்டங்கள் பெறப்பட்ட T-20 போட்டி

Ron Gaunt / BCCI/ SPORTZPICS
Ron Gaunt / BCCI/ SPORTZPICS

அமெரிக்காவின் புளோரிடா நகரில் கடந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான T-20 போட்டியொன்றில், இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 489 ஓட்டங்களினை குவித்து, அதிகூடிய மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட T-20 போட்டி என்னும் வரலாற்று சாதனை ஒன்றினை பதிவு செய்து கொண்டது. அத்துடன் T-20 வரலாற்றில் அதிகூடிய சிக்ஸர்கள் (32) அடிக்கப்பட்ட போட்டியாகவும் இப்போட்டி இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களினை வைத்து பார்க்கும்போது நடைபெற்று முடிந்துள்ள 2016ஆம் ஆண்டானது, கிரிக்கெட் விளையாட்டிற்கு நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய ஆண்டு என்று கூறுவதில் மிகை ஏதும் இருக்காது.