இலங்கையின் வெற்றி வாய்ப்பை சிதறடித்த மோமினுலின் சதம்; போட்டி சமநிலையில் முடிவு

988
©Associated Press

பங்களாதேஷ் அணியின் முதல் வீரராக மோமினுல் ஹக் இரு இன்னிங்சுகளிலும் பெற்ற சதத்தால் ஞாயிற்றுக்கிழமை (04) முடிவடைந்த இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு கை நழுவியது. இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த இந்த போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

[rev_slider LOLC]

சிட்டகொங், சஹர் அஹமது சவுத்ரி அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் மோமினுல் ஹக் முதல் இன்னிங்சில் 176 ஓட்டங்களைப் பெற்றதோடு நெருக்கடியான நேரத்தில் இரண்டாவது இன்னிங்சில் 174 பந்துகளில் 105 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றைத் தவிர்த்து இரண்டாவது இன்னிங்சில் ஸ்திரமான முன்னிலை பெற முடிந்தது. இதனால் ஐந்தாவது நாளில் போட்டி முடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் போதே ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொள்ள இரு அணித்தலைவர்களும் சம்மதித்தனர். அப்போது 17 ஓவர்களே எஞ்சியிருந்தன.

கடந்த புதன்கிழமை (31) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 513 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை அணி தனது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 713 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை வீரர்களிடம் தடுமாற்றம் காணும் பங்களாதேஷ்

இதன்படி 200 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வி நெருக்கடியுடனேயே பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

இந்நிலையில் 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து போட்டியின் கடைசிநாள் ஆட்டத்தை பங்களாதேஷ் அணி ஆரம்பித்தது. எனினும் 18 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை தொடர்ந்த மோமினுல் ஹக் நான்காவது விக்கெட்டுக்கு லிடோன் தாசுடன் இணைந்து இலங்கை அணியின் வெற்றி எதிர்பார்ப்பை சிதறடித்தார். கடைசி நாள் ஆட்டத்தின் பாதி நேரம் வரை களத்தில் இருந்த இந்த ஜோடி 180 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது.

எவ்வாறாயினும் இலங்கை அணி இந்த இரு வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த சிறிய வாய்ப்புகளை தவறவிட்டது அணிக்கு பாதகமாக அமைந்தது. பகல் போசண இடைவேளைக்கு பின் மோமினுல் ஹக் 71 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் பிடியெடுப்பொன்றை விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல தவறவிட்டார்.

அதேபோன்று லிடோன் தாஸ் 62 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சோட் மிட்விக்கெட் (Short midwicket) திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரர் கடினமான பிடியெடுப்பொன்றை தவறவிட்டார். போட்டியின் பிந்திய நேரத்தில் சந்தகன் மற்றொரு கடினமான வாய்ப்பை தவறவிட்டார். மஹ்மூதுல்லாஹ் உயர்த்திய பந்து சந்தகனின் விரலில் பட்டுச்சென்றது. அப்போது அணித்தலைவர் மஹ்மூதுல்லாஹ் 6 ஓட்டங்களுடனேயே இருந்தார்.

எனினும் தனஞ்சய டி சில்வா கடைசியில் நான்காவது விக்கெட் இணைப்பாட்டத்தை முறியடித்தார். தனது சதத்தை பூர்த்திசெய்த விரைவிலேயே மோமினுல் ஹக் தனஞ்சயவின் பந்தில் சிக்கினார். அப்போதே பங்களாதேஷ் அணி போட்டியில் தோல்வி நெருக்கடியை போதுமான வரை தவிர்த்திருந்தது.

174 பந்துகளுக்கு முகம்கொடுத்த மோமினுல் ஹக் 105 ஓட்டங்களை பெற்றார். இதில் அவர் 5 பவுண்டரிகளுடன் 2 சிக்ஸர்களையும் விளாசியமை குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டிலும் இதே சிட்டகொங் மைதானத்தில் மோமினுல் ஹக்கின் சதத்தின் உதவியோடு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தோல்வி ஒன்றை பங்களாதேஷ் அணி தவிர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி டெஸ்ட் போட்டி ஒன்றில் பங்களாதேஷ் அணி சார்பில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக மோமினுல் ஹக் புதிய சாதனை படைத்தார். இந்த போட்டியில் அவர் மொத்தம் 281 ஓட்டங்களை பெற்றார். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு தமிம் இக்பால் 231 ஓட்டங்களை பெற்றமை அதிகமாக இருந்தது.

மறுமுனையில் நிதானமாக துடுப்பாடிவந்த லிடோன் தாஸ் டெஸ்ட் போட்டியில் தனது கன்னி சதத்தை 6 ஓட்டங்களால் தவறவிட்டார். இரண்டாவது புதிய பந்தில் ஹேரத் லிடோனின் விக்கெட்டை சாய்த்தார். சிக்சர் மூலம் சதம் பெற முயன்ற லிடோனின் பிடியெடுப்பை டில்ருவன் பெரேரா பெற்றார். 182 பந்துகளுக்கு முகம்கொடுத்த லிடோன் 11 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்களைக் குவித்தார்.

கடைசி நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 281 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆரம்பமான போட்டியில் மேலும எட்டு ஓவர்களே வீசப்பட்டன.

சச்சித்ரவின் மிரட்டும் பந்துவீச்சால் SSC அணி இலகு வெற்றி

இதன்படி பங்களாதேஷ் அணி 100 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஐந்தாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்போது பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்சில் 107 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது. குறிப்பாக கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை அணியால் இரண்டு விக்கெட்டுகளையே வீழ்த்த முடிந்தது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான இந்த போட்டியில் மொத்தமாக 24 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதோடு 1533 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. இதில் ஐந்து சதங்கள் பெறப்பட்டன. குசல் மெண்டிஸ் தனது இரட்டை சதத்தை 4 ஓட்டங்களால் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இரண்டு இன்னிங்சுகளிலும் சதம் பெற்று பங்களாதேஷ் அணியை தோல்வியில் இருந்த காப்பாற்றிய மோமினுல் ஹக்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி மிர்பூரில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்