இளையோர் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை உறுதி செய்த இளம் வீராங்கனை பாரமி வசந்தி

164
Image Courtesy - NOCSL

ஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகரில் நடைபெற்று வரும் 3 ஆவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டிகளின் 2 ஆவது நாளான நேற்று (12) நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, தனது அதிசிறந்த காலப் பெறுமதியைப் பதிவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இம்முறை இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தபட்சம் 2 பதக்கங்களையாவது பெற்றுக்கொடுக்கின்ற போட்டி நிகழ்ச்சியாக மெய்வல்லுனர் போட்டிகள் கருதப்படுவதுடன், இதில் 4 வீர, வீராங்கனைகள் இலங்கை சார்பாக போட்டியிட்டு வருகின்றனர்.

ஆசிய பரா விளையாட்டில் 14 பதக்கங்களுடன் இலங்கைக்கு 14ஆவது இடம்

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றுவருகின்ற 3 ஆவது ஆசிய பரா விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர்…

இந்த நிலையில், பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் உலக தரவரிசையில் முதல் 3 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்த பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான முதல் நிலைப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

17 வீராங்கனைகள் பங்கேற்ற குறித்த போட்டியை 6 நிமிடங்களும் 33.06 செக்கன்களில் நிறைவு செய்த பாரமி மூன்றாவது இடத்தைப் பெற்று பதக்கமொன்றைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்தார்.

குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியை 6 நிமிடங்களும் 37.9 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image Courtesy – NOCSL

இதேநேரம், இலங்கை 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடிய பாரமி வசந்தி, ஜப்பானின் ஜிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதனையடுத்து, ஆர்ஜென்டீனாவில் தற்போது நடைபெற்று வருகின்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார். தாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதன்படி, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பாரமி பெற்றுக்கொண்டார்.

தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரி…

இது இவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் மாதம் அறிவிக்கப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் குழாமில் சிறப்புக் குழுவிலும் அவர் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், பாரமியுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட கென்யாவைச் சேர்ந்த சிரோனோ பென்சி (06நிமி. 26.08 செக்.) முதலிடத்தையும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த டிமிவோஸ் மீகிட்ஸ் (06நிமி. 33.06 செக்.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் புதிய விதிமுறைகள் பிரகாரம் 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின் முதல் நிலையில் பங்குபற்றிய வீரர்கள் அனைவரும் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள 4 கிலோமீற்றர் நகர்வல ஓட்டத்தில் பங்குபற்ற வேண்டும். இந்தப் போட்டியின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டுதான் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்ட வீரர்களுக்கான பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<