2019 ஐ.பி.எல் தொடரில் நிகழ்த்தப்படவுள்ள அரிய சில சாதனைகள்

269
IPL official page

ஐ.பி.எல் டி-20 தொடரின் 12 ஆவது அத்தியாயம் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி-20 கிரிக்கெட் தொடர், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக 12 ஆவது ஆண்டாகவும் நடைபெறவுள்ளது. ஒரு சினிமா படம் பார்ப்பது போன்று 3 மணி நேரத்தில் அதுவும் சில சமயம் த்ரில்லிங்காகவும், சுவாரஷ்யமாகவும் அமைவதால் இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு.

இந்த நிலையில், இன்று தொடங்கி மே மாதம் 2 ஆவது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள எட்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் – வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஓப்’ (play off) சுற்றுக்கு தகுதி பெறும்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் இந்தியன் ப்ரீமியர் லீக்

சர்வதேச போட்டிகளுக்கு நிகரான கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும்…

2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிகள் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றது. ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. அதனால் இம்முறை ஐ.பி.எல் தொடரில் இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அதுமாத்திரமின்றி இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் முக்கிய பல சாதனைகளும் முறியடிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அவ்வாறு முறியடிக்கப்படவுள்ள சாதனைகள் தொடர்பான விபரங்களைப் பார்க்கலாம்.

ரெய்னாவின் ஹெட்ரிக்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் மூன்று சாதனைகள் படைக்க உள்ளார்.

இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐ.பி.எல் தொடரில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். சுரேஷ் ரெய்னா இதுவரை  176 போட்டிகளில் விளையாடி 4,985 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இன்று (23) நடைபெறவுள்ள போட்டியில் சுரேஷ் ரெய்னா இந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் 15 சிக்ஸர்கள் அடித்தால் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமைiயும் அவருக்கு கிடைக்கும். இதுவரை நடைபெற்றுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் டோனி 186 சிக்ஸர்களையும், சுரேஷ் ரெய்னா 185 சிக்ஸர்களையும், ரோஹித் சர்மா 184 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர்.

எனவே, இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் சிக்ஸர்கள் அடித்து 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எற்பட்டுள்ளது.

எனினும், ஐபிஎல் தொடரில் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இம்முறை ஐ.பி.எல் தொடரில் சுரேஷ; ரெய்னா இன்னும் 5 பிடியெடுப்புகளை எடுத்தால் 100 பிடியெடுப்புகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் படைப்பார்.

கோஹ்லியின் புதிய மைல்கல்

சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் விராத் கோஹ்லி உள்ளார். இதுவரை 163 போட்டிகளில் 4,948 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். இவரும் இன்றைய போட்டியில் 52 ஓட்டங்களை எடுத்தால் 5000 ஓட்டங்களைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் நோக்கில் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்கும் மாலிங்க

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை…

இதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா 173 போட்டிகளில் 4,493 ஓட்டங்களை எடுத்து 3 ஆவது இடத்திலும், டெல்லி அணியின் கௌதம் கம்பீர் 154 போட்டிகளில் 4,217 ஓட்டங்களை எடுத்து 4 ஆவது இடத்திலும், கொல்கத்தா அணிக்காக விளையாடும் ரொபின் உத்தப்பா 165 போட்டிகளில் பங்கேற்று 4,086 ஓட்டங்களை எடுத்து 5 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

இதனிடையே, டி-20 போட்டிகளில் 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு விராத் கோஹ்லிக்கு இன்னும் 95 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. அவ்வாறு கோஹ்லி 8000 ஓட்டங்களை எட்டுவாராயின், டி-20 அரங்கில் அந்த மைல்கல்லை எட்டிய 2 ஆவது இந்திய வீரராகவும் இடம்பிடிப்பார்.

டோனியின் 100

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தலைவராக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வதில் முன்னிலை வீரராக உள்ள டோனி, இம்முறை ஐ.பி.எல் தொடரில் 100 ஆவது வெற்றியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

டோனி சென்னை சுப்பர் கிங்ஸ், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்காக தலைவராகப் பணியாற்றியுள்ளார். இதுவரை 159 ஆட்டங்களுக்கு தலைவராக இருந்துள்ள டோனி 94 இல் வெற்றியும், 64 இல் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. எனவே இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் டோனி 100 ஆவது வெற்றியை எட்டும் முதல் ஐ.பி.எல் தலைவர் என்ற மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த தலைவர்களில் 2 ஆவது இடத்தில் டெல்லி, கொல்கத்தா அணிகளுக்காக விளையாடிய கௌதம் கம்பீர் (71 இல் வெற்றி, 57 இல் தோல்வி, ஒரு சமநிலை) உள்ளார்.

அதேபான்று, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி இம்முறை ஐ.பி.எல் தொடரில் 5 வெற்றிகளைப் பதிவுசெய்தால் 50 வெற்றிகள் என்ற புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். இதுவரை அவர் அந்த அணிக்காக 45 போட்டிகளில் வெற்றியையும், 48 தோல்விகளையும், 3 போட்டிகளில் சமநிலையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஜடேஜாவா? வொட்சனா?

சகலதுறை வீரர்களாக ஐ.பி.எல் போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு சென்னை வீரர்களான ரவீந்திர ஜடேஜாவுக்கு 7 விக்கெட்டுக்களும், ஷேன் வொட்சனுக்கு 8 விக்கெட்டுக்களும் தேவைப்படுகின்றன. குறித்த மைல்கல்லை குறித்த இரண்டு வீரர்களும் எட்டுவார்களாயின் ஐ.பி.எல் போட்டிகளில் 100 விக்கெட்டுக்களுடன் 1000 ஓட்டங்களைக் கடந்த டுவைன் பிராவோவுடன் இணைந்து கொள்வர்.

மும்பையின் 100ஆவது வெற்றி

ஐ.பி.எல் போட்டித் தொடரில் 3 முறை சம்பியன் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 100 ஆவது (98 வெற்றிகள்) வெற்றியைப் பதிவுசெய்த முதல் அணியாக மாறுவதற்கு இன்னும் இரண்டு வெற்றிகள் தேவைப்படுகின்றன. அத்துடன், 90 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்துள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 10 போட்டிகளில் வெற்றிபெற்றால் அந்த மைல்கல்லை அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69

டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இலங்கையை ஒருநாள் தொடரில்…

தவானின் 100ஆவது பிடியெடுப்பு

பதினொரு வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊர் அணியான டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ஷிகர் தவான், இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் இன்னும் 2 பிடியெடுப்புக்களை எடுத்தால் டி-20 அரங்கில் 100 பிடியெடுப்புக்கள் எடுத்த வீரராக மாறுவார். அதேபோல, சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வீரர் ரித்திமான் சஹாவுக்கு 100 பிடியெடுப்புகள் மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 3 பிடியெடுப்புகள் தேவைப்படுகின்றன.

பிராவோவின் 500 விக்கெட்டுகள்

அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணியாக வலம்வந்து கொண்டிருக்கின்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள டுவைன் பிராவோ, இன்னும் 21 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினால் டி-20 அரங்கில் 500 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரராக இடம்பெறுவார். தற்போது 438 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 479 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

3ஆவது வீரராக ரோஹித்

இந்திய அணி சார்பாக 300 டி-20 போட்டிகளில் விளையாடிய 3 ஆவது வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுக்கொள்ளவுள்ளார். நாளை (24) டெல்லி கெப்பிடல்ஸ் அணியுடனான போட்டியின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டவுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணி சார்பாக டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் 300 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

600 சிக்ஸர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரென் பொல்லார்ர்ட்டுக்கு டி-20 அரங்கில் 600 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை அடைவதற்கு இன்னும் 15 சிக்ஸர்கள் தேவைப்படுகின்றன. எனினும், டி-20 அரங்கில் 907 சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

டீ.கேயின் விக்கெட் காப்பு

ஐ.பி.எல் போட்டிளில் அதிக வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் காப்பாளர்களான கொல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் (94 பிடியெடுப்பு, 30 ஸ்டம்பிங் என்று 124 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்) முதலிடம் வகிக்கிறார். எனினும், இன்னும் 2 ஸ்டம்பிங் அல்லது பிடியெடுப்பு செய்தால் டி-20 போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்துவதற்கு வித்திட்ட வீரராக மாறுவார். இவரை அடுத்து டோனி (116 விக்கெட்), உத்தப்பா (90 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

கிறிஸ் கெய்லின் 4000

ஐ.பி.எல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை எடுத்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரரகளில் முதல் வீரராகவும் வலம்வந்து கொண்டிருக்கின்ற கிறிஸ் கெய்ல் இன்னும் 6 ஓட்டங்களைப் பெற்றால் ஐ.பி.எல் போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும், 8 சிக்ஸர்கள் அடித்தால் 300 சிக்ஸர்கள் என்ற புதிய மைல்கல்லையும் எட்டவுள்ளார்.

இசுரு உதானவின் அதிரடி வீண்; டி20 தொடரை இழந்தது இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இசுரு…

நரைனின் புதிய மைல்கல்

டி-20 போட்டிகளில் ஓட்டமற்ற ஓவர்களை வீசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொள்வதற்கு கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைனுக்கு இன்னும் ஒரு ஓவர்கள் மாத்திரமே தேவையாக உள்ளது. டி-20 போட்டிகளில் 21 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக வீசி சுனில் நரைன் மற்றும் சாமுவேல் பத்ரி ஆகியோர் சம இடங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வொட்சனின் 300

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக அணிகளுக்காக பங்கேற்ற ஒரே வீரராக அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ஞ்ச் வலம் வந்துகொண்டிருக்கின்றார். எனினும், அவுஸ்திரேலிய அணி சார்பாக 300 டி-20 போட்டிகளில் விளையாடி முதல் ஆஸி. வீரர் என்ற பெருமையை சென்னை அணிக்காக விளையாடவுள்ள ஷேன் வொட்சன் இம்முறை ஐ.பி.எல் தொடரில் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு அணிகளும் சிரேஷ்ட வீரர்களோடும், புதிய வீரர்களோடும் இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கவுள்ளதால் யாருடைய கை ஓங்கும் என்பதை இப்போதே கணிப்பது கடினம்.

அதேபோல, ஐ.பி.எல். என்றாலே ஓட்ட மழையைத்தான் அனைவரும் விரும்புவார்கள். கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர், டேவிட் வோர்னர், மார்டின் கப்டில், ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், ஷேன் வொட்சன், ஹர்திக் பாண்டியா, கிரென் பொல்லார்ட், ஜோஸ் பட்லர், அன்ட்ரூ ரஸ்செல், கிறிஸ் மோரிஸ்…. இப்படி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டக்கூடிய மெகா பட்டாளமே அணிவகுத்து இம்முறை ஐ.பி.எல் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கின்றது என்றால் மிகையாகது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<