இலங்கையில் நீல நிறங்களின் சமர் என்று பொதுவாக அழைக்கப்படும் கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்று நாட்களை கொண்ட கிரிக்கெட் போட்டி, 138ஆவது தடவையாகவும் புதுப் பொழிவுடன் டிஎஸ் சேனநாயக்க ஞாபகர்த்த கேடயத்துக்காக கொழும்பு SSC மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய புனித தோமியர் கல்லூரி, முதலில் கொழும்பு றோயல் கல்லுரரியை துடுப்பாடுமாறு பணித்தது. அந்த வகையில் களமிறங்கிய றோயல் கல்லூரி, சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டாலும் தோமியர் கல்லூரி வேகப்பந்து வீச்சாளர் கழன பெரேராவின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 71.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய யூவின் ஹேரத் மற்றும் ரோனுக்க ஜயவர்தன முதல் விக்கெட்டுக்காக 16 ஓட்டங்களை பெற்றிருந்த போது, கழன பெரேராவின் பந்து வீச்சில் முதல் விக்கெட்டாக யூவின் ஹேரத் வெறும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், அதனை தொடர்ந்து களமிறங்கிய பசிந்து சூரியபண்டார ரோனுக்க ஜயவர்தனவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 91 பந்துகளை எதிர்கொண்டு 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேநேரம் அணியின் ஓட்டங்களை உயர்த்தி அணியை வலுப்படுத்தினர்.

அதேநேரம் மீண்டும் அதிரடி காட்டிய கழன பெரேரா, பசிந்து சூரியபண்டாரவை நேரடியாக LBW முறையில் ஆட்டமிழக்க செய்தார். அதனை தொடர்ந்து கொழும்பு றோயல் கல்லூரி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. றோயல் கல்லூரி சார்பாக கனித் சந்தீப 42 ஓட்டங்களையும், ஹிமேஷ் ராமநாயக்க 41 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். சிறப்பாக பந்து வீசிய கழன பெரேரா, போட்டியின் போக்கை மாற்றிய அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்தி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து, தனது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி, இன்றைய நாள் ஆட்டநேர நிறைவின் போது, எவ்விதமான விக்கெட் இழப்புமின்றி 33 ஓட்டங்களை பெற்றிருந்தது. சிறந்து ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த ரவிந்து கொடிதுவக்கு மற்றும் துளித் குணரத்ன முறையே 23 மற்றும் 10 ஓட்டங்களை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தனர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 255 (71.3) – கனித் சந்தீப 42, ஹிமேஷ் ராமநாயக்க 41, கவிந்து மதரசிங்க 38, பசிந்து சூரியபண்டார 35, ரோனுக்க ஜயவர்தன 32, கழன பெரேரா 5/47, பவித் ரத்னாயக்க 2/69

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 33/0 (10.3) – ரவிந்து கொடிதுவக்கு 23*, துளித் குணரத்ன 10*