அனுபவத்திற்கும் – இளமைக்கும் இடையிலான 113ஆவது வடக்கின் பெரும் சமர்

91

வட மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையில் இடம்பெறும் நூற்றாண்டு தாண்டிய வரலாற்றினைக் கொண்டுள்ள “வடக்கின் பெரும் சமர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடரில்,113ஆவது போட்டியானது எதிர்வரும் 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Photo Album : St. John’s College, Jaffna U19 Cricket Team Preview 2018/19

இலங்கையின் பழமை வாய்ந்த கல்லூரிகளான மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான இந்த வடக்கின் பெரும் சமர் போட்டியானது 1904ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை இடம்பெற்றுள்ள 112 சமர்களில் 36 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும், 28 போட்டிகளில் மத்திய கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளன. 40 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளனஒரு போட்டி(1967) கைவிடப்பட்ட அதேவேளை, 7 போட்டிகளின் (1905, 1911-1914, 1925, 1927) முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.

கடந்த வருடம் இடம்பெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டியில் சிவலிங்கம் தசோபனது  தலைமையில் ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரியினர் ஏழு வருடங்களின் பின்னர் கிண்ணத்தினை மீட்டிருந்தனர். இறுதியாக சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்கள் 2017ஆம் ஆண்டில் ஜெனி பிளெமினின் தலைமையில் இன்னிங்ஸ் வெற்றியொன்றினை  பதிவுசெய்திருந்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

கடந்த வருடம் முதலாக தொடர்ச்சியாக பேசப்பட்டுவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் இம்முறை இரண்டு இளையோர் தேசிய அணி வீரர்களுடன் களங்காண்கின்றனர். இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்க தொடரில் கடந்த வருடம் காலிறுதிப் போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியினை தழுவியிருந்த மத்திய கல்லூரியினர் இம்முறை பலம்வாய்ந்த அணியாக தொடரில் தோல்விகளேதுமின்றி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

பருவகாலத்தில் வெறுமனே 9 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள மத்திய கல்லூரி 2 இன்னிங்ஸ் வெற்றிகள் உட்பட 3 வெற்றிகளையும், 5 முதல் இன்னிங்ஸ் வெற்றிகளையும் பெற்றுள்ளனர். அதேவேளை மொறட்டுவை சென். செபஸ்டியன் கல்லூரிக்கெதிரான போட்டியினையும் சமநிலையில் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Album : Jaffna Central College U19 Cricket Team Preview 2018/19

பெரும் சமரிற்காக மத்திய கல்லூரி அணியினை இலங்கை இளையோர் அணி வீரரும், தமிழ் யூனியன் கழகத்திற்காக இந்த வருடம் முதற்தர போட்டிகளில் அறிமுகத்தினை பெற்ற, பெறும் சமரில் ஐந்து வருட அனுபவ வீரரான செல்வராச மதுசன் தலைமை தாங்குகின்றார்.

மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தினை அவதானிக்கையில் முன்வரிசையில் அணியின் உபதலைவர் ஜெயதர்சன் முக்கிய வீரர். அவருக்கு இணையாக இயலரசனும் சிறந்த பெறுதியினை வெளிப்படுத்தக்கூடிய வீரர்.  

அணியின் துடுப்பாட்டத்தின் பலமாக மத்திய வரிசை விளங்குகின்றது. அனுபவம் வாய்ந்த இந்த பருவகாலத்தில் சோபித்த ராஜ்கிளின்டன், தேசிய குழாத்திலிருந்து மீண்டும் அணியில் இணைந்துள்ள வியாஸ்காந்த், பருவகாவத்தில் கல்லூரிக்கான ஒரே சதத்தினை பெற்றுக்கொடுத்துள்ள மதுசன் மற்றும் நிதுசன் என அனுபவம் வாய்ந்த மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை கொண்டுள்ளனர் மத்திய கல்லூரியினர்.

மேலதிகமாக இந்துஜன், நிதர்சன் மற்றும் இளையவீரர் சாரங்கன் ஆகியோரும் கைகொடுக்கக் கூடியவர்கள்.

பந்து வீச்சினை அவதானிக்கையில் தேசிய மட்ட தொடர்களில் அசத்திய விதுசன், பிரவீன்ராஜ்  ஆகிய இரண்டு விசேட  சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களான தேசிய வீரர் வியாஸ்காந்த், நிதுசன் ஆகியவர்களும் வேகப்பந்து வீச்சினை அணியின் தலைவர் மதுசன், இயலரசனுடன் ஆகியோரும் இணைந்து வழிநடத்துகின்றனர்.

தேசிய குழாமில் வீரர்கள் அங்கம் வகித்தமை, உபாதைகள் காரணமாக ஒரே பதினொருவருடன் மத்திய கல்லூரி அநேக போட்டிகளில் பங்கெடுக்காவிட்டாலும் கடந்த கால அனுபவங்கள், அண்மைய வாரங்களில் பெற்ற   தொடர் பயிற்சி என்பன அணியினை வலுப்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும்.  

அனுபவம் வாய்ந்த நீண்ட துடுப்பாட்ட வரிசை மற்றும் பல ரகமான விசேட சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களுடன் இம்முறையும் வெற்றியொன்றினை பெற்று கிண்ணத்தினை தக்கவைக்கும் நோக்குடன் களம் காணுகின்றது மத்தியின் படை.  

15 வருட அனுபவம் கொண்ட பயிற்றுவிப்பாளர் சுரேஷ்மோகன் கடந்த வருட வெற்றிகொடுத்த உற்சாகத்துடன் இவ்வருடம் பெரும் சமர் மற்றும் பிரிவு 3 தொடர் ஆகியவற்றினை தம்வசப்படுத்தும் நோக்குடன் அணியினை வழிநடத்தி வருகின்றார்.

சென். ஜோன்ஸ் கல்லூரி  

கடந்த வருடம் பலத்த போராட்டத்தின் பின்னர் கிண்ணத்தினை பறிகொடுத்திருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இவ்வருடம் மிகவும் இளம் அணியொன்றுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் சமரில் களங்காண்கின்றனர்.

இவ்வருடம் பிரிவு II தொடரில் சோபித்திருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் குழுவில் இரண்டாவது இடத்தினை பெற்றிருந்தனர். எனினும், காலிறுதிக்கு தகுதி பெறுவதற்கான விலகல் போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்து தொடரிலிருந்து விலகியிருந்தனர்.

இளம் அணிக்கு அதிகளவிலான அனுபவத்தினை பெறும் நோக்குடன், இந்த பருவகாலத்தில் 20 போட்டிகளில் பங்கெடுத்திருக்கின்ற சென். ஜோன்ஸ் கல்லூரியினர் 2 முதல் இன்னிங்ஸ் வெற்றிகளுடன் 9 வெற்றிகளை பெற்றுள்ளனர். அதேவேளை 3 தோல்விகளை சந்தித்துள்ளதுடன், 3 முதல் இன்னிங்ஸ் தோல்விகளினையும் சந்தித்துள்ளனர்.  

அணியினை, நான்காம் வருடமாக களமிறங்கும் சகலதுறை  வீரரான மேர்பின் அபினாஷ் தலைமை தாங்குகின்றார். அணியின் துடுப்பாட்டத்தினை பொறுத்தவரையில் முன்வரிசையில் பலம் சேர்க்கின்றார் உப தலைவர் சௌமியன். அதேவேளை, தனுஜன் மற்றும் சுகேதன் ஆகியோரும் விரைவாக ஓட்டங்களினை பெறக்கூடியவர்கள்.

மத்திய வரிசையில் 3 சதங்களுடன் 1000 ஓட்டங்களினை நெருங்கிக்கொண்டிருக்கும் 3ஆம் வருடமாக கமிறங்கும் இளைய வீரர் டினோசன் முக்கிய புள்ளியாக உள்ளார். அணித்தலைவர் அபினாஷ் மற்றும் இளைய வீரர்களான சபேசன், அபிஷேக் ஆகியோர் துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுக்கக்கூடிய முக்கியமானவர்கள்.

சுழற்பந்து வீச்சினை அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சரனுடன் இணைந்து அபினாஷ் வழிநடத்துகின்றார். அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ரதுசன், டினோசன் மற்றும்  இளைய வீரர் அபிஷேக் ஆகியோரும் லாவகமாக, இலாபகரமாக பந்து வீசக்கூடியவர்கள்.

சென். ஜோன்ஸ் அணியினை பொருத்தவரையில்  ஹேமதுசன், எல்சான் டெனுசன் மற்றும் பிரணவன் ஆகியோரது பாத்திரம் முக்கியமானதாக அமையும்.

>>போட்டியை நேரடியாகப் பார்வையிட <<

சென் ஜோன்ஸ் அணியின் முன்னாள் தலைவர் பத்மனாதன் லவேந்திரா முதற்பதினொருவர் அணியின் பயிற்றுவிப்பாளராக  இரண்டு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பொறுப்பெற்றிருக்கின்றார். இளம் படையணியினைக்கொண்டு சிறந்த போட்டியொன்றினை வழங்கும் நோக்குடன் லவேந்திரா இம்முறை பெரும் சமருக்கு அணியை தயார்படுத்துகின்றார்.

இவ்வருடம் பெரும் சமர் வெளிப்படையில் அனுபவ வீரர்கள்இளைய வீரர்களிற்கான போட்டியாக தெரிந்தாலும், எந்த கல்லூரி அணிக்கு சிரேஷ்ட விரர்களுடன் இணைந்து இளைய வீரர்கள் கைகொடுக்கிறார்களோ அவ்வணி இவ்வருட சமரில் சோபிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

இரு கல்லூரிகளிற்கும் பருவகாலம் முழுவதும் சுழற்பந்து வீச்சாளர்களும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுமே சோபித்துள்ளனர். பெரும் சமரில் வேகப்பந்து வீச்சும் நிச்சயமாக முக்கிய அங்கம் வகிக்கும்.

கடந்த காலங்களை விட வித்தியாசமானதாக இம்முறை, அனுபவம் மிக்க மத்திய கல்லூரி அணி கிண்ணத்தினை தம்மகத்தே கொண்டு களமிறங்குகின்றது. சென். ஜோன்ஸ் கல்லூரி இளைய வீரர்களுடனும் களங்காண்கின்றது.

நாளை ஆரம்பமாகும் பெரும் சமரினை Thepapare.com மூலமாகவும், My TV செயலி மற்றும் டயலொக் தொலைக்காட்சி அலைவரிசை 71 மூலமாகவும்  நேரடியாக கண்டுகளிக்க முடியும்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<