பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் லீக் ரக்பி சம்பியன்ஷிப் தொடரில் மேலும் இரண்டு வாரங்களிற்கான போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், நான்கு அணிகள் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல சளைக்காது போராடி வருகின்றன. திரித்துவக் கல்லூரி, இசிபதன கல்லூரி, வெஸ்லி கல்லூரி மற்றும் றோயல் கல்லூரி ஆகிய குறித்த நான்கு அணிகளும் இவ்வாரம் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிகளை சுவீகரித்திருந்தன.

வெஸ்லி கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

சென்ற வாரம் பலமிக்க திரித்துவக் கல்லூரியை தோற்கடித்து அதிர்ச்சியளித்த புனித பேதுரு கல்லூரி இவ்வாரம் வெஸ்லி கல்லூரியை லொங்டன் பிளேஸ் மைதானத்தில் எதிர்கொண்டது.

வெஸ்லி கல்லூரி வீரர் முர்ஷீத் சுபைரின் உதையுடன் போட்டி ஆரம்பித்ததுடன், போட்டியின் முதல் புள்ளிகளை புனித பேதுரு கல்லூரி பெற்றுக் கொண்டது. போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ஸ்டீபன் சிவராஜ் தனது அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை வெற்றிகரமாக உதைத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

மலேசியா செல்லும் இலங்கை ரக்பி அணியின் தலைவராக ரொஷான் வீரரத்ன

ஐந்து நிமிடங்களின் பின்னர் வெஸ்லி கல்லூரியின் இமேஷ் அபொன்சு போட்டியின் முதல் ட்ரையினை வைத்தார். கொன்வெர்சன் உதையை அவிஷ்க லீ வெற்றிகரமாக உதைத்தார். அதனை தொடர்ந்து புனித பேதுரு கல்லூரிக்கு மற்றுமொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததுடன், இம்முறையும் ஸ்டீபன் சிவராஜ் குறிதவறாது உதைத்து புள்ளி வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்தார்.

முதல் பாதி முடிவடைவதற்கு சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் அவிஷ்க லீ அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை வைத்து எதிரணியை நிலைகுலையைச் செய்தார். வெஸ்லி கல்லூரிக்கு கிடைத்த இரண்டு கொன்வெர்சன் உதைகளில் ஒரு உதை குறிதவறிய போதிலும், இரண்டாவது உதையை அவிஷ்க லீ புள்ளிகளாக மாற்றினார்.

முதல் பாதி: வெஸ்லி கல்லூரி 19 – 06 புனித பேதுரு கல்லூரி

இரண்டாம் பாதியின் ஆரம்ப நிமிடங்களில் இரண்டு அணிகளினாலும் புள்ளிகளைப் பெற முடியவில்லை. சில நிமிடங்கள் கடந்த பின்னர் புனித பேதுரு கல்லூரி சார்பாக பிலால் ஹில்மி ட்ரை ஒன்றினை பெற்றுக் கொண்டார். கடினமான உதையை சிவராஜ் தவறவிட்ட போதிலும், அதனைத் தொடர்ந்து கிடைத்த பெனால்டி உதையை அவர் சிறப்பாக உதைத்து புள்ளி வித்தியாசத்தை மீண்டும் குறைத்தார்.

புனித பேதுரு கல்லூரி மற்றுமொரு ட்ரையினை வைத்து முன்னிலை பெற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும், அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் போட்டி நிறைவுபெறும் தருவாயில் இமேஷ் அபொன்சு தனது இரண்டாவது ட்ரையினை வைத்து வெஸ்லி கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தார். அவிஷ்க லீயின் லாவகமான கொன்வெர்சன் உதையுடன் போட்டி நிறைவடைந்தது.

முழு நேரம்: வெஸ்லி கல்லூரி 26 – 14 புனித பேதுரு கல்லூரி

ThePapare.com இன் ஆட்டநாயகன் – அவிஷ்க லீ (வெஸ்லி கல்லூரி)

புள்ளிகளைப் பெற்றுக் கொண்டோர்

வெஸ்லி கல்லூரி 26 – அவிஷ்க லீ (2T, 3C), இமேஷ் அபொன்சு (2T)

புனித பேதுரு கல்லூரி 14 – ரவின் பெர்னாண்டோ (1T), ஸ்டீபன் சிவராஜ் (3P)


திரித்துவக் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள திரித்துவக் கல்லூரியானது புனித ஜோசப் கல்லூரியை ஹெவலொக் மைதானத்தில் எதிர்கொண்டது.

போட்டியை அட்டகாசமாக ஆரம்பித்த திரித்துவக் கல்லூரி ஆரம்பத்திலேயே ரிஷான் மாதன ஊடாக ட்ரை வைத்தது. இலகுவான கொன்வெர்சன் உதையை திரித்துவக் கல்லூரி அணி தவறவிட்டது. எதிரணிக்கு சிறப்பாக பதிலளித்த புனித ஜோசப் கல்லூரி சதுர செனவிரத்ன மூலமாக ட்ரை வைத்ததுடன், சச்சித் சில்வா கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

சில நிமிடங்களின் பின், புனித ஜோசப் கல்லூரியின் ஸ்க்ரம் ஹாப் வீரர் ரஷான் குணவர்தன மற்றுமொரு ட்ரையினை வைத்தார். இம்முறையும் சச்சித் சில்வா வெற்றிகரமாக மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து திரித்துவக் கல்லூரியின் தலைவர் நேதன் யீ மற்றும் உபதலைவர் அனுக போயகொட ஒவ்வொரு ட்ரை வீதம் பெற்றுக் கொண்டனர். எனினும் இரண்டு கொன்வெர்சன் உதைகளையும் அவ்வணி தவறவிட்டது.

இடைவேளைக்கு சில நிமிடங்களின் முன்னர் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை புள்ளிகளாக மாற்ற எண்ணிய புனித ஜோசப் கல்லூரி, சச்சித் சில்வாவின் சிறப்பான உதையின் மூலம் முதல் பாதியினை முன்னிலையில் நிறைவு செய்தது.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 17 – 15 திரித்துவக் கல்லூரி

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலும் சச்சித் சில்வா பெனால்டி உதை ஒன்றை குறிதவறாது உதைத்தார். எனினும் சிறப்பாக பதிலடி கொடுத்த திரித்துவக் கல்லூரி சார்பில் அகில சகலசூரிய மற்றும் வொரன் வீரகோன் ட்ரைகளை பெற்றுக் கொண்டனர். இரண்டு உதைகளையும் லஷான் விஜேசூரிய இலக்கை நோக்கி உதைத்தார்.

போட்டியின் இறுதி காற்பகுதியில் லஷான் விஜேசூரிய பெனால்டி உதை ஒன்றினை உதைத்து வித்தியாசத்தை பத்துப் புள்ளிகளாக அதிகரித்தார். எனினும் சளைக்காது போராடிய புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் வினுல் பெர்னாண்டோ மூலமாக ட்ரை வைத்தனர். கொன்வெர்ஷன் உதை குறிதவறிய போதும், புள்ளி வித்தியாசம் ஐந்தாகக் குறைந்தது.

ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை ரக்பி குழாம் அறிவிப்பு

இறுதி நிமிடங்களில் ட்ரை ஒன்றினை பெற்றுக் கொள்ள புனித ஜோசப் கல்லூரிக்கு பல வாய்ப்புக்கள் கிட்டிய போதிலும், அவ்வணி வாய்ப்புக்களைத் தவறவிட்டு ஏமாற்றமளித்தது. அதன்படி திரித்துவக் கல்லூரி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

முழுநேரம்: புனித ஜோசப் கல்லூரி 25 30 திரித்துவக் கல்லூரி  

ThePapare.com இன் ஆட்டநாயகன் – ரிஷான் மாதன (திரித்துவக் கல்லூரி)

புள்ளிகளைப் பெற்றுக் கொண்டோர்

புனித ஜோசப் கல்லூரி 25 – சதுர செனவிரத்ன (1T), ரஷான் குணவர்தன (1T), வினுல் பெர்னாண்டோ (1T), சச்சித் சில்வா (2C, 2P)

திரித்துவக் கல்லூரி 30 – ரிஷான் மாதன (1T) , நேதன் யீ (1T), அணுக போயகொட (1T), அகித சகலசூரிய (1T), வொரன் வீரகோன் (1T), லஷான்  விஜேசூரிய (1C, 1P) 


இசிபதன கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி

இவ்விரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக்கு மத்தியில் ஹெவலொக் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் முதல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட இசிபதன கல்லூரி, ரமித்த ஹிமாஷின் ஊடாக ட்ரை ஒன்றினை வைத்தது. எனினும் சமோத் பெர்னாண்டோவின் கொன்வெர்சன் உதை குறிதவறியது.

சொற்ப நேரமே கடந்த நிலையில் புனித தோமியர் கல்லூரியும் ட்ரை ஒன்றினை வைத்து போட்டியை சிறப்பாக ஆரம்பித்தது. அதீஷ ஹந்துன்பத்திரன ட்ரையினை வைத்ததுடன் டியோன் டயஸ் கொன்வெர்சன் உதையை புள்ளிகளாக மாற்றினார்.

அதன் பின்னர் முதல் பாதியில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இசிபதன கல்லூரி, ரெண்டி சில்வாவின் ஊடாக அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை வைத்தது. இரண்டு உதைகளையும் சமோத் பெர்னாண்டோ வெற்றிகரமாக உதைக்க, இசிபதன வலுவான நிலையில் முதல் பாதியை நிறைவு செய்தது.

முதல் பாதி: இசிபதன கல்லூரி 19 – 07 புனித தோமியர் கல்லூரி

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலும் இசிபதன கல்லூரியின் சுதீர திஸாநாயக்க ட்ரை ஒன்றினை வைத்து புனித தோமியர் கல்லூரியை நிலைகுலையச் செய்தார். எனினும் இம்முறை கொன்வெர்சன் உதை குறிதவறியது.

பதினேழு புள்ளிகள் பின்னிலையில் காணப்பட்ட போதும், சளைக்காது எதிர்த்தாக்குதல் நடத்திய புனித தோமியர் கல்லூரி வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைத்து புள்ளி வித்தியாசத்தை மூன்றாகக் குறைத்தனர். ஆபித் காதர் மற்றும் நவீன் ஹீனகங்கணம்கே ட்ரைகளை வைத்ததுடன், இரண்டு உதைகளையும் டியோன் டயஸ் வெற்றிகரமாக உதைத்தார்.

எவ்வாறாயினும் அதனைத் தொடர்ந்து போட்டியை முழுமையாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இசிபதன கல்லூரியின் ரமித்த ஹிமாஷ், சமோத் பெர்னாண்டோ, ரவிந்து அஞ்சுல ட்ரை மழை பொழிய அவ்வணியின் வெற்றி உறுதியானது. இதன்படி இறுதியில் இசிபதன கல்லூரி இலகு வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

முழு நேரம்: இசிபதன கல்லூரி 41 – 21 புனித தோமியர் கல்லூரி

ThePapare.com இன் ஆட்டநாயகன்: ரெண்டி சில்வா (இசிபதன கல்லூரி)

புள்ளிகளைப் பெற்றுக் கொண்டோர்

இசிபதன கல்லூரி 41 – ரெண்டி சில்வா (2T), ரமித்த ஹிமேஷ் (2T), சுதீர கயநாத் (1T), ரவிந்து அஞ்சுல (1T), சமோத் பெர்னாண்டோ (1T, 3C)

புனித தோமியர் கல்லூரி 21 – அதீஷ ஹந்துன்பத்திரன (1T), ஆபித் காதர் (1T), நவீன் ஹீனகங்கணம்கே (1T), டியோன் டயஸ் (3C)


றோயல் கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி

முதல் டிவிஷனிற்கு முன்னேறி பிரபல அணிகளுக்கு கடும் அழுத்தத்தை வழங்கியிருந்த ஸாஹிரா கல்லூரி, றோயல் கல்லூரியுடன் மோதியது.

இரு அணிகளும் சரிசமனான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எதிரணியை பந்தாடிய றோயல் கல்லூரி முதல் பாதியிலேயே ஆறு ட்ரைகளை வைத்து அசத்தியது.

இலங்கை ரக்பி அணி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பிஜி பயிற்றுவிப்பாளர்

‘ரோலிங் மோல்’ நகர்வை சிறப்பாக செயற்படுத்திய றோயல் கல்லூரியின் ஹம்சா ரீஸா முதல் பாதியில் மூன்று ட்ரைகள் வைத்து ஹெட்ரிக் சாதனை படைத்தார். லெனோக்ஸ் கல்யாணரத்ன, ஜனிது டில்ஷான் மற்றும் துலைப் ஹசன் ஆகியோரும் ஒவ்வொரு ட்ரை வீதம் வைத்தனர். எனினும் ஆறு கொன்வெர்சன் உதைகளில் ஒரு உதையை ஷாகிர் நவ்பர் உதைத்ததுடன், ஏனைய ஐந்து உதைகளும் குறிதவறியிருந்தன.

முதல் பாதி: றோயல் கல்லூரி 32 – 00 ஸாஹிரா கல்லூரி

இரண்டாம் பாதியையும் ட்ரை ஒன்றுடன் ஆரம்பித்த றோயல் கல்லூரி சார்பாக துலைப் ஹசன் தனது இரண்டாவது ட்ரையினை வைத்தார். இம்முறை ஷாகிர் கொன்வெர்சன் உதையை குறிதவறாது உதைத்தார்.

சில நிமிடங்களின் பின்னர் ஒருவாறாக ஸாஹிரா கல்லூரிக்கு போட்டியின் முதல் புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்த செய்த் சின்ஹவன்ச ட்ரை ஒன்றினை வைத்தார். கொன்வெர்சன் உதையையும் அவரே குறிதவறாது உதைத்திருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் தனது ட்ரை மழையை ஆரம்பித்த றோயல் கல்லூரி, ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ட்ரைகள் வைத்தது. பசிந்து பெர்னாண்டோ மற்றும் ரசஞ்சன அமரசிங்க தங்கள் முதல் ட்ரைகளையும், ஜனிது டில்ஷான் தனது இரண்டாவது ட்ரையினையும் வைத்தனர்.

இறுதியாக ஹம்சா ரீஸா இப்போட்டியில் தனது நான்காவது ட்ரையினை பெற்றுக் கொண்டார். றோயல் கல்லூரியின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொண்டு நிலைகுலைந்த ஸாஹிரா கல்லூரி, போட்டியின் இறுதி நிமிடத்தில் அணித்தலைவர் அமாத் மூலம் ஆறுதல் ட்ரை ஒன்றினை வைத்தது.

முழு நேரம்: றோயல் கல்லூரி 65 – 14 ஸாஹிரா கல்லூரி

ThePapare.com இன் ஆட்டநாயகன் – ஹம்சா ரீஸா (றோயல் கல்லூரி)

புள்ளிகளைப் பெற்றுக் கொண்டோர்

றோயல் கல்லூரி 65 – ஹம்சா ரீஸா (4T), துலைப் ஹசன் (2T), பசிந்து பெர்னாண்டோ (2T), ரசஞ்சன அமரசிங்க (1T), லெனோக்ஸ் கல்யாணரத்ன (1T), ஜனிது டில்ஷான் (1T), ஷாகிர் நவ்பர் (4C), மலீஷ பெரேரா (1C)

ஸாஹிரா கல்லூரி 14 – செய்த் சின்ஹவன்ச (1T, 2C), டி. எஸ். அமாத் (1T)

புள்ளிகள் அட்டவணை

points table